ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மதுரையின் வெள்ளிவிழா நாயகன் என்று சிவாஜியை ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

மதுரையின் வெள்ளிவிழா நாயகன் என்று சிவாஜியை ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

சிவாஜி

சிவாஜி

மதுரையில் பல நடிகர்களின் படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளன. சிவாஜியின் எத்தனையோ படங்கள் மதுரையில் 175 நாட்களை கடந்து ஓடியிருக்கின்றன. ஆனால், ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்களை தந்தவர் சிவாஜி கணேசன் மட்டுமே.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

எம்ஜிஆர், சிவாஜி  படங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டால் இப்போதுள்ள ரசிகர்கள் அதிர்ச்சியில் மூர்ச்சையாகிப் போவார்கள். அதிலும் சிவாஜி கணேசன் ஓய்வின்றி நடித்தவர். வருடத்துக்கு அரை டஜன் படங்கள் வெளியாகும். அதில் நான்கு முதல் ஐந்து படங்கள் 100 நாள்களைத் தாண்டும். வெள்ளி விழாக்கள் சகஜம்.

அன்றும் இன்றும் மதுரை சினிமா ரசிகர்களின் சொர்க்கம். சேலத்திற்கு அடுத்து சினிமா மீது வெறி கொண்ட ரசிகர்கள் அதிகமிருப்பது மதுரையில். ஒரு படத்தின் வெற்றியை சென்னையைவிட மதுரையை மையப்படுத்தி பார்ப்பதே வழக்கம். சென்னையில் ஓடாத படங்களும் மதுரையில் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

Also read... 'மிஸ்டர் ராமச்சந்திரன்...!' - படப்பிடிப்பில் எம்ஜிஆரை அதட்டிய பிரபல நடிகை

இன்றுவரை மதுரையின் சாதனை நாயகனளாக சிவாஜி கணேசனே இருக்கிறார். அவரது படங்கள் மதுரையில் செய்த சாதனைகள் அளப்பரியது. குறிப்பாக மதுரையின் வெள்ளி விழா நாயகன் என்று சிவாஜி கணேசனை அவரது ரசிகர்கள் அழைக்கிறார்கள். ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் இந்தப் பட்டத்தை அவருக்கு தந்திருக்கிறார்கள்.

மதுரையில், ஒரு வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்கள் தந்த நடிகர்கள் யார் என்று பட்டியலிட்டால் அதில் முதல் இடத்தில் சிவாஜி கணேசன் வருகிறார். நிறைய நடிகர்கள் வெள்ளிவிழா படங்கள் தந்திருக்கிறார்கள். மதுரையில் பல நடிகர்களுடைய படங்கள் 175 நாள்கள் ஓடியுள்ளன. ஆனால், மதுரையில் ஒரே வருடத்தில் இரு வெள்ளி விழா படங்கள் தந்தவர்களில் சிவாஜி கணேசனே முன்னிலையில் இருக்கிறார். 1959, 1972, 1983 ஆகிய மூன்று வருடங்களில் சிவாஜி கணேசனின் தலா இரு படங்கள் மதுரையில் வெள்ளிவிழா கண்டுள்ளன.

1959 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி சிவாஜி கணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளியானது. மதுரை நியூ சினிமா திரையரங்கில் வெளியான இப்படம் அங்கு 181 தினங்கள் ஓடி சாதனைப் படைத்தது. அதே வருடம் அக்டோபர் 31 ஆம் தேதி சிவாஜியின் மற்றொரு திரைப்படம் பாகப்பிரிவினை வெளியானது. மதுரை சிந்தாமணி திரையரங்கில் வெளியான இந்தப் படம் அங்கு 215 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது.

1972 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி சிவாஜி கணேசனின் பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் வெளியானது. மதுரையில் இப்படம் 182 தினங்கள் ஓடியது. அதே வருடம் செப்டம்பர் 29 ஆம் தேதி சிவாஜியின் வசந்த மாளிகை வெளியானது. சூப்பர் ஹிட்டான இந்தப் படம் மதுரை நியூ சினிமா திரையரங்கில் 200 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது.

1983 ஆம் ஆண்டு ஜனவரி 28 குடியரசு தினத்தை முன்னிட்டு சிவாஜி நடித்த நீதிபதி வெளியானது. இந்தப் படம் மதுரையின் சினி/மினிப்ரியா திரையரங்கில் 177 தினங்கள் ஓடியது. அதே வருடம் ஜுன் 16 ஆம் தேதி சிவாஜியின் சந்திப்பு திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மதுரை சுகப்ரியாவில் 175 தினங்கள் ஓடி சாதனைப் படைத்தது.

மதுரையில் பல நடிகர்களின் படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளன. சிவாஜியின் எத்தனையோ படங்கள் மதுரையில் 175 நாட்களை கடந்து ஓடியிருக்கின்றன. ஆனால், ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்களை தந்தவர் சிவாஜி கணேசன் மட்டுமே. இந்த சாதனையை அவரது படங்கள் மூன்றுமுறை செய்துள்ளன. இதன் காரணமாக அவரை அவரது ரசிகர்கள் மதுரையின் வெள்ளி விழா நாயகன் என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Sivaji ganesan, Entertainment