ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழகத்தின் பிரபல அரசியல்வாதியும், நடிகருமான இந்த சிறுவனை தெரிகிறதா?

தமிழகத்தின் பிரபல அரசியல்வாதியும், நடிகருமான இந்த சிறுவனை தெரிகிறதா?

வானம்பாடி

வானம்பாடி

Vaanambadi Tamil Movie | 59 வருடங்களுக்கு முன்பு 1963 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இதே நாளில் வானம்பாடி திரைக்கு வந்தது. கண்ணதாசன் இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

இந்தப் புகைப்படத்தில் எஸ்எஸ் ராஜேந்திரன், தேவிகா உடன் இருக்கும் சிறுவன் யார் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். கமல்ஹாசனின் குழந்தை நட்சத்திரப் புகைப்படங்கள் தமிழகத்தில் பிரபலம். ஆம், இது  மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன்தான்.

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த கமலஹாசனின் நான்காவது திரைப்படம் இது. பெயர் வானம்பாடி. 59 வருடங்களுக்கு முன்பு 1963 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இதே நாளில் வானம்பாடி திரைக்கு வந்தது. கண்ணதாசன் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். எஸ்எஸ் ராஜேந்திரன், தேவிகா, முத்துராமன், எஸ்பி  சகஸ்கரநாமம், டி ஆர் ராஜகுமாரி ,டி ஆர் ராமச்சந்திரன், ஆர்எஸ் மனோகர், கமல்ஹாசன் உட்பட பலர் இதில் நடித்திருந்தனர். தேவிகா நடித்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படமாக வானம்பாடி கருதப்படுகிறது. இதில் அவர் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். கணவர் ஆர்எஸ் மனோகரின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறும் மீனா என்ற அப்பாவியாகவும், பேரும் புகழுடன் வாழும் தைரியமான பாடகி கவுசல்யாவாகவும் இரண்டு வேடங்களிலும் வித்தியாசம் காட்டி நடித்திருந்தார். அவரது திரை வாழ்க்கையில் இந்தப் படமே அவரது நடிப்பின் உச்சமாக கருதப்படுகிறது. படத்தின் வெற்றிக்கு தேவிகாவின் நடிப்பும் ஒரு காரணமாக அமைந்தது.

சிவகங்கை சீமை, கவலை இல்லாத மனிதன் ஆகிய படங்களை தயாரித்து, நெடித்துப் போயிருந்த  கண்ணதாசன் ஏகப்பட்ட கடன்களுக்கு நடுவில் வானம்பாடியை தயாரித்தார். இந்தப் படம்  Sesh Parichaya என்ற வங்க திரைப்படத்தின் கதையை தழுவி  எடுக்கப்பட்டது. வங்க திரைப்படத்தை சுசில் மஜூம்தார் இயக்கியிருந்தார். வங்காளத்தில் சுமாராக போன திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜி ஆர் நாதன் படத்தை இயக்கியிருந்தார். கே மகாதேவன் படத்திற்கு இசையமைத்து இருந்தார். கண்ணதாசன் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார். வானம்பாடியில் இடம்பெற்ற, கங்கை கரை தோட்டம்.., தூக்கணாங்குருவி கூடு..., ஊமைப் பெண் ஒரு கனவு கண்டால்..., கடவுள் மனிதனாக..., ஏட்டில் எழுதி வைத்தேன்..., யாரடி வந்தார் என்னடி சொன்னார்..., ஏனடி இந்த உல்லாசம்...., நில் கவனி புறப்படு... என அனைத்து பாடல்களும் அந்த காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்போதும், கங்கை கரை தோட்டம்..., தூக்கணாங்குருவி கூடு..., கடவுள் மனிதனாக... பாடல்கள்  அனேகரது விருப்பப் பாடலாக இருக்கிறது.

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு, தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி எனப்படும் டிஆர் ராஜகுமாரி கடைசியாக நடித்த திரைப்படம் இதுதான். இதற்கு பிறகு அவர் எந்தத் திரைப்படத்திலும் நடிக்கவில்லை. வானம்பாடி படம் கொடுத்த லாபத்தின் காரணமாக கண்ணதாசன் தனது கடன்களில் இருந்து ஓரளவு மீள முடிந்தது.

அப்போதெல்லாம் பத்திரிகைகளில் திரைப்படங்கள் குறித்து கறாரான விமர்சனங்கள் வரும். எஸ்எஸ் ராஜேந்திரன், தேவிகா, முத்துராமன், சகஸ்ரநாமம், டிஆர் ராமச்சந்திரன், ஆர் எஸ் மனோகர் போன்ற முக்கியமான நடிகர்கள் நடித்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கவனிக்கப்படுவது அபூர்வம். ஆனால், வானம்பாடியில் தனக்கு தரப்பட்ட சிறிய வேடத்திலும் கமல்ஹாசன் முத்திரைப் பதித்தார்.  அப்போதெல்லாம் குழந்தை நட்சத்திரம் தேவைப்பட்டால் மும்பையிலிருந்துதான் அவர்களை வரவைப்பார்கள். இதனை தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்த கல்கி பத்திரிகை இப்படி எழுதியது....

"திரைக்கதைக்கு வடநாட்டை தேடி ஓடும் நம் படாதிபதிகள், குழந்தை பாத்திரங்களுக்கும் வட நாட்டையே எதிர்பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மாஸ்டர் கமலஹாசன் அந்த குறையை போக்குவதோடு நன்றாகவும் நடித்திருக்கிறான். அவனுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாகவே 'சான்ஸ்' கொடுத்து இருக்கலாம்"  என குறிப்பிட்டிருந்தது.

Also read... அவள் ஒரு தொடர்கதை... நடிகை சுஜாதாவின் மறுபக்கம்...

(அப்போது கமலின் பெயர் கமல்ஹாசன் அல்ல கமலஹாசன். பிறகுதான ல வில் ஒரு புள்ளியிட்டு கமல்ஹாசன் ஆனார்).

வானம்பாடி தேவிகா, கண்ணதாசன் உள்பட பலருக்கும் முக்கியமான படமாக அமைந்தது. தமிழ் சினிமா வரலாற்றிலும் வானம்பாடிக்கு சிறப்பான இட ம்  உண்டு.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Kamal Haasan