எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் அனைவருக்கும் தெரியும். கமல் நடித்த ஆயிரத்தில் ஒருத்தி படம் குறித்து அனேகம் பேருக்கு தெரியாது.
1975-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் தேதி இதே நாளில் ஆயிரத்தில் ஒருத்தி வெளியானது. அப்போது கமல் மலையாளத்தில் கன்யாகுமரி படத்தில் நாயகனாக நடித்திருந்தார். தமிழில் அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை என சொற்பப் படங்களே அவர் பெயர் சொல்லும்படி வெளியாகியிருந்தன. ஆயிரத்தில் ஒருத்தியை அவினாசிமணி இயக்கியிருந்தார். படத்தின் மைய கதாபாத்திரத்தில் நடித்தவர் கே.ஆர்.விஜயா.
செய்யாத கொலை குற்றத்துக்காக ஜெயிலில் இருக்கும் அவரை வழக்கறிஞரான சுஜாதா வாதாடி வெளியில் கொண்டு வருவார். குடிகாரன், ஜெயிலுக்கு சென்றவன் என்ற பெயருடன் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் இருக்கும் தனது அண்ணனுக்கு கே.ஆர்.விஜயாவை சுஜாதா மணமுடித்து வைப்பார். சுஜாதாவின் நவநாகரிக தங்கையாக ஜெயசுதா நடித்திருந்தார். இவரை காதலிப்பவராக கமல். படத்தில் அவரது பெயரே கமல் என்றுதான் வரும். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சியை கவர்ச்சிகரமாக எடுத்திருந்தார் இயக்குனர். முக்கியமாக ஜெயசுதா சின்ன சார்ட்ஸ் அணிந்து கவர்ச்சியில் கலக்கியிருப்பார்.
யூ-ட்யூப் பிரபலம் பரிதாபங்கள் சுதாகர் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!
கே.ஆர்.விஜயா யாரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தாரோ அவரது மகனான ஸ்ரீகாந்த்தான் சுஜாதாவின் காதலர். சுஜாதாவை திருமணம் செய்ய வேண்டுமென்றால் கே.ஆர்.விஜயா தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் பிளாக்மெயில் செய்வார். இதனிடையில் ஜெயசுதாவை காதலித்து கர்ப்பமாக்கியிருக்கும் கமல் தான் உண்மையான குற்றவாளி என்பதை கே.ஆர்.விஜயா கண்டுபிடிப்பார். குடும்பம் சிதையாமல் இருக்க, இதனை கே.ஆர்.விஜயா மறைத்து சுஜாதா, ஜெயசுதா இருவருக்கும் திருமணம் செய்து வைப்பார். அடடா, ஒரு கொலை குற்றவாளியை ஜெயசுதாவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்களே, இதென்ன அறம் என்று பார்வையாளர்களுக்கு தோன்றும் நேரம், அதிரடியாக ஒரு ட்விஸ்டை வைத்து படத்தை முடித்திருப்பார்கள்.
கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
இந்தப் படத்தின் டைட்டிலில் கே.ஆர்.விஜயாவின் பெயர் முதலில் வரும். அதன் பிறகு அண்ணனாக வரும் பாலாஜியின் பெயர். அப்போது கமலைவிட ஸ்ரீகாந்த் பிரபலம் என்பதால் மூன்றாவது பெயர் ஸ்ரீகாந்த், அதன் பிறகு நான்காவதாக தான் கமல் பெயர் வரும். இந்தப் படத்துக்கு கமலுக்கு தரப்பட்ட சம்பளம் 17,000/- ரூபாய். இதை வைத்துதான் 16 வயதினிலே படத்துக்கு கமலுக்கு சம்பளம் பேசியிருக்கிறார்கள் பாரதிராஜாவும், சித்ரா லட்சுமணனும். ஆனால், 30,000/- ரூபாய் தந்தால்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்து, 16 வயதினிலே படத்துக்கு முப்பதாயிரம் சம்பளம் பெற்றார் கமல்ஹாசன்.
47 வருடங்களுக்கு முன் வந்த நாயகி மையப்படமான ஆயிரத்தில் ஒருத்தியில் சில பிற்போக்குத்தனமான கருத்துகள் பல இருந்தாலும் கே.ஆர்.விஜயா, சுஜாதா, ஜெயசுதா என்று மூன்று பெண் கதாபாத்திரங்களை வலுவாக படைத்து அதைச்சுற்றி கதையை அமைத்தவகையில் ஆயிரத்தி ஒருத்தியை பாராட்டியே ஆகவேண்டும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.