யாரையும் புண்படுத்தும்படி நடந்து கொள்ளக்கூடாது என தனது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய். அவருடைய ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைத்து மக்கள் பணிகளைச் செய்து வருகிறார் விஜய். அரசியல் குறித்த கருத்துகளை அவ்வப்போது பேசி அரசியல் களத்தில் விஜய் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், இந்த ஆண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியினர். இதில், விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமான வார்டுகளில் வெற்றி பெற்றனர்.
கல்பாத்தி அகோரம் இல்லத் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் சந்திப்பு
இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் அறிவுரையில் வெளியிடப்பட்ட அறிக்கை என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அதில், ‘அரசுப் பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை, மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில் , இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும், இயக்கத்தினர் வெளியிடக் கூடாது.
இது நம் விஜய்யின் கடுமையான உத்தரவின்பேரில், ஏற்கெனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதனை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம்.
இருப்பினும், நம் விஜய் அறிவுறுத்தலை, மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தைவிட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.