கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டினேன் - உதயநிதி ஸ்டாலின் பரபர ட்வீட்

உதயநிதி ஸ்டாலின் | கர்ணன்

‘கர்ணன்’ படத்தின் தவறை இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்டோரிடம் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் இரண்டு நாட்களில் சரிசெய்து விடுவதாக அவர்கள் உறுதியளித்திருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Share this:
மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வந்த இத்திரைப்படம் ஒருபக்கம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. இந்நிலையில் 1998-ல் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது கொடியன்குளம் கலவரம் நடந்ததாக கர்ணனில் காண்பிக்கப்படுகிறது எனவும், இது வரலாற்றை திரித்து கூறும் செயல் எனவும் சில விமர்சகர்கள் அதிருப்தி தெரிவித்தது சமூகவலைதளங்களில் பேசுபொருளானது

இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், “‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.கர்ணன் படத்தின் குறியீடுகள்:

தூத்துக்குடி கொடியன்குளம் சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் கதாபாத்திரங்கள் வாழும் கிராமத்துக்கு பொடியன் குளம், என பெயர் வைத்ததில் தொடங்கி படம் நெடுக குறியீடுகளின் வழியே காட்சிகளின் வீரியத்தை ரசிகர்களிடம் கடத்தி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

குறிப்பாக தெய்வங்களையும் தெய்வ வழிபாடுகளையும் மாரி செல்வராஜ் உணர்த்தி இருக்கும் விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சாதி ரீதியான ஒடுக்குமுறையை நினைவுபடுத்தும் விதமாக, படம் முழுக்க தலையில்லா புத்தர் சிலையை இடம்பெறச் செய்திருப்பதும் மறைந்தவர்கள் நாட்டார் தெய்வங்களாக, தங்களை வழி நடத்துவதை அழுத்தமாக சொல்லியிருப்பதும் என மாரி செல்வராஜ் வரலாற்றை நினைவுகூறும் பல சம்பவங்களை திரைக்கதை கட்டமைப்புக்குள் அழகாக புகுத்தியிருக்கிறார்.

அதேபோல் தான் பேச நினைக்கும் அரசியலை நம்மை சுற்றி இருக்கும் உயிரினங்கள் வழியே பேசி விடுவது மாரிசெல்வராஜின் தனிசிறப்பு. அந்தவகையில் கழுதையின் முன்னங்கால்கள் கட்டப்பட்டிருப்பது அடிமைச்சங்கிலியின் குறியீடாகவும் அவை வெட்டி ஏறியப்படும், காட்சியில் உரிமைக்கான குரல் ஓங்கி ஒலிக்கும் விதமாகவும் காட்சிப்படுத்தி மிரட்டியிருக்கிறார்.

ஊர் பெயர்களை போலவே கர்ணன், திரௌபதி, துரியோதனன் அபிமன்யு என கதாபாத்திரங்களின் பெயர்களையும் மகாபாரத பெயர்களைக் கொண்டு சித்தரித்திருக்கும் மாரி செல்வராஜ் இது உரிமைக்கான போர் என்பதை வலியுறுத்தும் விதமாக யானை, குதிரை, வாள் ஆகியவற்றை பயன்படுத்தி கூடுதலாக கவனம் ஈர்த்திருக்கிறார்.

மொத்தத்தில் தமிழ் சினிமாவில் காட்சிகளின் வழியே உணர்வுகளை கடத்தும் இயக்குனர்களின் வரிசையில் மாரி செல்வராஜ் தன்னுடைய பெயரை தன் இரண்டாவது படத்திலேயே மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
Published by:Sheik Hanifah
First published: