விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ! மு.க.ஸ்டாலின் இரங்கல்

மு.க.ஸ்டாலின்

Actor Vivek: விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஆற்றல்மிக்க நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர்.

  பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர். தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ!

  அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் திரையுலகினர் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.

  நடிகர் விவேக் 1961-ம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்தவர். 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை உடன் சிறந்த சமுதாய சீர்திருத்த கருத்துகளையும் கூறி நடித்து வந்தார். இதனால் அவர் சின்ன கலைவாணர் என்ற அடைமொழியால் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதை 5 முறை பெற்றவர் விவேக். 2009-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

  நடிகர் விவேக் மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

   
  Published by:Vijay R
  First published: