Home /News /entertainment /

ஜெய் பீம் சர்ச்சை: சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இயக்குநர்கள்!

ஜெய் பீம் சர்ச்சை: சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இயக்குநர்கள்!

ஜெய் பீம்

ஜெய் பீம்

ஜெய் பீம் முழு படக்குழுவிற்கும் நாங்கள் துணையாக நிற்கிறோம், என இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

  ஜெய் பீம் பட விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.

  நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். சூர்யாவின் 39-வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

  படத்தில் வில்லன் வீட்டில் அக்னி கும்ப காலண்டர் இருப்பது வன்னியர் சமூகத்தை குறிப்பிடுவது போல் இருப்பதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, அது சரிசெய்யப்பட்டது. அதோடு ஜெய் பீம் படத்தில் வில்லனாக நடித்திருந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு குரு மூர்த்தி எனப் பெயரிடப்பட்டிருந்தது.

  இதையடுத்து வன்னியர் சங்க தலைவர் காடு வெட்டி குருவின் பெயர் குற்றவாளி கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக பிரச்னை கிளம்பியது. இந்த விவகாரம் தொடர்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சூர்யாவுக்கு பல்வேறு கேள்விகள் கேட்டு அறிக்கை வெளியிட்டதுடன், தியேட்டர்களில் படம் திரையிடுவதை வன்னிய சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தும் சூழல் ஏற்படலாம் என்றும் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கைக்கு சூர்யாவும் விரிவான பதில் அளித்திருந்தார்.

  ஆனாலும், சூர்யா உள்ளிட்ட ‘ஜெய் பீம்’ படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெய் பீம் பட விவகாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது.

  இந்த விஷயத்தில், தி.க, வி.சி.க, கம்யூனிஸ்டு உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், திரைப்பிரபலங்களும், ரசிகர்களும், பொது மக்களும் சூர்யாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக இயக்குநர்கள் பலர் சூர்யாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். அதில் முக்கியமான சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

  ”நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்? ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை.

  எதுவாக இருந்தாலும், எங்களோடு பேசுங்கள். சரியென்றால் சரிசெய்துகொள்ளும் நண்பர்கள் நாங்கள். எப்போதும் நட்போடு பயணப்படுவோம்” என இயக்குநர் பாரதிராஜா, அன்புமணி ராமதாஸுக்கு அறிக்கை வெளியிட்டிருந்தார்.  ”பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்யும் வகையில் இப்படத்தை உருவாக்கிய இயக்குநர் ஞானவேலின் அர்ப்பணிப்பும், சமூக நீதிக்காக சூர்யாவின் தொடர் முயற்சிகளும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. இந்த நிலை மாறுவதை விரும்பாதவர்கள் மத்தியில் இந்தப் படங்கள் கோபத்தை ஏற்படுத்துவது இயற்கையே- நாங்கள் சூர்யாவின் பக்கம் நிற்கிறோம். சமூகத்தில் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் கேள்வி கேட்கும் எந்தவொரு படைப்புமே சமூக நீதிக்கான ஆயுதம்தான். ஜெய் பீம் முழு படக்குழுவிற்கும் நாங்கள் துணையாக நிற்கிறோம்” என இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

  ”சமூகநீதியை நிலைநாட்ட வற்பறுத்தும் திரைப்படைப்புகளையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட. அந்த வகையில் "ஜெய்பீம்" படக்குழுவினருடன் எப்போதும் நான்...” என இயக்குநர் அமீர் சூர்யாவுக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

  இதே போல், இயக்குநர்கள் பா.ரஞ்சித், கோபி நயினார், நவீன், சிம்பு தேவன் உள்ளிட்டவர்களும், சூர்யாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Suriya, Bharathiraja, Director vetrimaran

  அடுத்த செய்தி