மன்மத லீலை என்று வெங்கட் பிரபு தனது படத்துக்கு பெயர் வைத்தாலும் வைத்தார்... போனிலும், நேரிலும் இவர்கள் போடும் சண்டைக்கு அளவேயில்லை.. ஓரமாகப் போகிறவர்களும் நெருங்கி வந்து நாலு கல்லை விட்டெறிந்துவிட்டு செல்கிறார்கள்.
பழைய படங்களின் பெயர்களை பயன்படுத்துவது என்றால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் NOC எனப்படும் நோ அப்ஜெக்ஷன் சான்றிதழை பெற வேண்டும். இது தயாரிப்பாளர்கள் சங்க விதி. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் உயிருடன் இல்லை என்றால் அவரது குடும்பத்தினரிடம் NOC பெற வேண்டும். இது நன்கு தெரிந்தும் 1976 இல் மன்மத லீலை படத்தை தயாரித்த கலாகேந்திரா கோவிந்தராஜனின் குடும்பத்திடம் அனுமதி பெறாமல் தனது படத்துக்கு அதே பெயரை வைத்தார் வெங்கட்பிரபு. இப்போது கேட்டால், எங்களிடம் யாரும் (அதாவது தயாரிப்பாளர்கள் சங்கம்) NOC கேட்கவில்லை. சென்சாரிலும் எங்கள் பெயருக்கு அனுமதி வாங்கிவிட்டோம். அப்பாவிடம் (கங்கை அமரன்) இதுபற்றி கேட்டதற்கு, அவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் என பிரச்சனையின் மையத்தை பேசாமல் அதற்கு வெளியே கம்பு சுற்றுகிறார். அவரைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பழைய பெயர்கள் காலாவதியாகிவிடும். அதன் பிறகு யார் வேண்டுமானாலும் அந்தப் பெயரை பயன்படுத்தலாம். கரகாட்டக்காரன் பெயரை இதுபோல் ஒருவர் பயன்படுத்தினால், அப்போதும் இதே பதிலை வெங்கட்பிரபு சொல்வரா?
இந்த விவகாரத்தில் சம்பந்தமே இல்லாமல் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சிங்காரவேலன் தலையிட்டு குட்டையை குழப்பியிருக்கிறார். கலாகேந்திரா கோவிந்தராஜனின் குடும்பத்தினர் டைட்டிலை விட்டுத்தர 50 லட்சம் கேட்டார்கள் என்று புது குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கிறார். இவர்தான் லிங்கா படம் வெளியான மூன்றாவது நாளே படம் நஷ்டம் என்று போர்க்கொடி தூக்கியவர். இவரது குற்றச்சாட்டை கோவிந்தாஜனின் மகள் கவிதா மறுக்கிறார். அப்படியெல்லாம் கேட்கவேயில்லை என்றிருப்பவர் தண்ணீர் தண்ணீர், எதிர் நீச்சல், அரங்கேற்றம், நிழல் நிஜமாகியது, தில்லு முல்லு உள்பட தமிழின் முக்கியமான படங்களை தயாரித்த எங்கள் மீது இப்படியா அபாண்ட பழிச்சொல் போடுவது என்று திருப்பிக் கேட்கிறார். சூப்பர் ஸ்டாரை அறிமுகப்படுத்திய எங்களுக்கு நல்ல கைமாறு தருகிறது இப்போதைய திரையுலகம் என்ற ஆதங்கம் அவர்கள் பேச்சில் ஒலிக்கிறது. கலாகேந்திராதான் ரஜினி அறிமுகமான அபூர்வராகங்கள் படத்தை தயாரித்தது.
Also read... விற்பனையானது எனிமி படத்தின் ஓடிடி உரிமை...!
கே.பாலசந்தரின் ரசிகர் மன்றமும் இப்போது களத்தில் குதித்திருக்கிறது. அதை கேட்க நீ யார், என்னை கேட்க அவர்கள் யார் என்றரீதியில் நடக்கும் போன் உரையாடல்களின் ஆடியோ அடுத்தடுத்து வெளியாகி பிரச்சனையை சூடு குறையாமல் வைத்துள்ளன. இப்படித்தான் சூர்யா படத்துக்கு மாஸ் என்று பெயர் வைத்து, அது ஆங்கிலப் பெயர் வரிச்சலுகை கிடையாது என்றதும் மாஸ் என்கிற மாசிலாமணி என மாற்றி, அது செல்லுபடியாகாது என்றதும், மாசு என்று பெயர் வைத்தார்கள். மன்மத லீலைக்கும் அப்படியொரு மாசு வந்திடாம பார்த்துக்குங்க சார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Venkat Prabhu