முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "டே! நண்பா... ஆயிரம் முத்தங்கள் டா லிங்கு”- நெகிழும் வசந்த பாலன்

"டே! நண்பா... ஆயிரம் முத்தங்கள் டா லிங்கு”- நெகிழும் வசந்த பாலன்

இயக்குநர் வசந்தபாலன்

இயக்குநர் வசந்தபாலன்

கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள வசந்த பாலன், தன் நண்பன் லிங்குசாமி மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வந்த நிகழ்வை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வசந்த பாலன் தமிழ் திரையுலகில் குறைவான படங்களே இயக்கியிருந்தாலும் ரசிகர்களின் மனதில் மதிப்பிற்குரிய இடத்தை பெற்றிருப்பவர். வெயில் படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வசந்த பாலன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வசந்த பாலனும், லிங்குசாமியும் நெருங்கிய நண்பர்கள்.

வசந்த பாலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்திக் கேட்டு துடித்து போன லிங்குசாமி மருத்துவர்களிடம் போராடி பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துக்கொண்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வசந்த பாலனை நேரில் சந்தித்து அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள வசந்த பாலன், தன் நண்பன் லிங்குசாமி மருத்துவமனைக்கு தன்னை சந்திக்க வந்த நிகழ்வை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read: ஓடிடி-யில் வெளியாகும் சந்தோஷ் சிவனின் ’இனம்’ திரைப்படம்!

வசந்தபாலனின் ஃபேஸ்புக் பதிவில்,

வீரம் என்றால் என்ன ?

பயமில்லாத மாதிரி நடிக்கிறது.

பழைய வசனம்.

வீரம் என்றால் என்ன தெரியுமா ?

பேரன்பின் மிகுதியில்

நெருக்கடியான நேரத்தில்

அன்பானவர்கள் பக்கம் நிற்பது

புதிய வசனம்

போன வாரத்தில்

மருத்துவமனையின்

தீவிர சிகிச்சைப் பிரிவில்

அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று

இரவு முழுக்க நித்திரையின்றி

இரவு மிருகமாய்

உழண்டவண்ணம் இருக்கிறது

விடிந்தும் விடியாமலும் அதன் கால்கள்

மருத்துவமனைத் தேடி விரைகிறது

எனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடுகிறது

தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க அனுமதிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது

இடையறாது சண்டக்கோழியாய் போராடுகிறது

உங்களை அனுமதித்தால் உங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது

பரவாயில்லை சில நிமிடங்கள் அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறது

வேறு வழியின்றி

முழு மருத்துவ உடைகளுடன்

அனுமதிக்கப்படுகிறது

மெல்ல என் படுக்கையை ஒட்டி

ஒரு உருவம் நின்றபடியே

எனைப்பார்த்த வண்ணம் இருக்கிறது.

ஆண்பென்குவின் போன்று தோற்றமளிக்கிறது.

எனையே உற்றுப்பார்த்த வண்ணம் இருக்கிறது

மருத்துவரா

இல்லை

செவிலியரா

என்று

எனக்கு வித்தியாசம் தெரியவில்லை

உள்ளிருந்து "டாக்டர்" என உச்சரிக்கிறேன்

"லிங்குசாமிடா" என்றது அந்த குரல்

அத்தனை சுவாசக்கருவிகளையும் மீறி மொத்த சக்தியையும் திரட்டி

"டே! நண்பா" என்று கத்தினேன்

"பாலா" என்றான்

அவன் குரல் உடைந்திருந்தது

வந்திருவடா…

"ம்" என்றேன்

என் உடலைத் தடவிக்கொடுத்தான்

எனக்காக பிரார்த்தனை செய்தான்

என் உடையாத கண்ணீர்பாறையிலிருந்து ஒரு கண்ணீர்த்துளி கசிந்தது.

தைரியமாக இரு

என்று என்னிடம் சொல்லிவிட்டு

செல்லும் போது

யாரிந்த தேவதூதன் என்று மனசு அலட்டியது.

இந்த உயர்ந்த நட்புக்கு

நான் என்ன செய்தேன் என்று

மனம் முப்பது ஆண்டுகள்

முன்னே பின்னே ஓடியது.

"உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா….."

என்றேன்

நானிருக்கிறேன்

நாங்களிருக்கிறோம்

என்றபடி

ஒரு சாமி

என் அறையை விட்டு வெளியேறியது.

கோடிக்கணக்கான நட்பின் கரங்கள்

எனை அணைத்தது போன்று இருந்தது.

ஆயிரம் முத்தங்கள் லிங்கு…..

ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய்..”

First published:

Tags: Corona, Corona positive, Covid-19, Director lingusamy, Vasantha balan