Shankar: ஷங்கர் படம் இயக்க தடை விதிக்க வேண்டும் - லைகா நிறுவனம் கடிதம்

ஷங்கர்

லைகா செய்த தாமதமே இந்தியன் 2 படப்பிடிப்பு நின்று போனதற்கு காரணம் என்பதை தனது பதில் மனுவில் குறிப்பிட்ட ஷங்கர், படத்தின் நாயகன் கமலையும் தாமதத்திற்கான காரணமாக குறிப்பிட்டிருந்தார்.

  • Share this:
    இந்தியன் 2 படத்தை முடிக்கும் வரை வேறு படங்களை இயக்க ஷங்கரை அனுமதிக்கக் கூடாது, அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான லைகா கடிதம் எழுதி உள்ளது.

    2.0 படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு, கமலை வைத்து படப்பிடிப்பை ஆரம்பித்தார் ஷங்கர். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. 270 கோடி பட்ஜெட் சொல்லி, லைகா கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 250 கோடியாக அதனை குறைத்தார் ஷங்கர். இந்நிலையில் படப்பிடிப்பில் விபத்து நிகழ்ந்து சில உயிர்கள் பறிபோன சோக சம்பவமும் நடந்தது.

    இதனால் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கமலின் அரசியல் அவுட்டிங் காரணமாக இந்த நிறுத்தம் இன்னும் நீண்டது. இந்தியன் 2 படத்துக்குப் பதில் தெலுங்கு, தமிழில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க தீர்மானித்தார் ஷங்கர். அதற்கான வேலைகள் நடக்கையில் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்து, ரன்வீர் சிங்கை ஒப்பந்தம் செய்தார். இன்னும் நான்கு வருடங்களுக்கு ஷங்கரை பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த லைகா, இந்தியன் 2 படத்தை முடித்த பிறகே வேறு படங்களை அவர் இயக்க வேண்டும் என இடைக்கால தடை கேட்டது. அதனை மறுத்த நீதிமன்றம், ஷங்கர் தரப்பிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

    லைகா செய்த தாமதமே இந்தியன் 2 படப்பிடிப்பு நின்று போனதற்கு காரணம் என்பதை தனது பதில் மனுவில் குறிப்பிட்ட ஷங்கர், படத்தின் நாயகன் கமலையும் தாமதத்திற்கான காரணமாக குறிப்பிட்டிருந்தார். இந்த விசாரணை ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்த பிறகே ஷங்கர் இந்தி, தெலுங்கில் படம் இயக்க அனுமதிக்க வேண்டும், அதுவரை அவர் படம் இயக்க அனுமதிக்கக் கூடாது என தடைகோரி இந்தி மற்றும் தெலுங்கு ஃபிலிம் சேம்பர்களுக்கு லைகா நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. இதனால், ஷங்கர் ராம் சரண் மற்றும் ரன்வீர் சிங் படங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: