கே.ஜி.எஃப். 2 படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
இந்தியாவில் மட்டும் ரூ. 1000 கோடி வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை கே.ஜி.எஃப். 2 பெற்றுள்ளது. இந்த சாதனை பட்டியலில் பாகுபலி 2 முதலிடத்தில் இருக்கிறது.
இன்னும் இந்தியாவின் பல்வேறு திரையரங்குகளில் கே.ஜி.எஃப். 2 ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தின் வசூல் ரூ. 1400 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் பெரிய அளவில் குறை சொல்ல முடியாத அளவுக்கு கேஜிஎஃப் 2-ல் காட்சியமைப்புகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
லாஜிக் மீறல்கள் சில இருந்தாலும், ராக்கியால் இது முடியும் என்று ரசிகர்கள் நம்பும் அளவுக்கு கதாநாயகனின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. வலுவான திரைக்கதை, மிரட்டலான பின்னணி இசை, சம்பவம் நடக்கும் இடத்திற்கே நம்மை கொண்டு சேர்க்கும் ஒளிப்பதிவு, படத்தில் இடம்பெற்ற அத்தனை கேரக்டர்களின் நடிப்பு ஆகியவை படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றன.
கேஜிஎஃப் 2 படத்தை பாராட்டாத பிரபலங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லோரும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், பிரமாண்ட படங்களை சர்வ சாதாரணமாக எடுக்கும் இயக்குனர் ஷங்கர், கேஜிஎஃப் 2 படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘கேஜிஎஃப் 2 படத்தை பார்த்தேன். படத்தின் கதை, திரைக்கதை, எடிட்டிங் ஆகியவை மிகப்பெரும் வியப்பை அளித்தன. ஆக்சன் காட்சிகள், வசனங்கள் மிக அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. ஸ்டைலான, மாஸ் ஹீரோவாக யாஷை காட்டியிருந்தார்கள். எங்களுக்கு ‘பெரியப்பா’ அனுபவத்தை தந்த இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு நன்றி. ஸ்டன்ட் இயக்குனர் அன்பறிவின் உழைப்பு வெறித்தனமாக இருந்தது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.
கேஜிஎஃப் 2 படத்தில் இடம்பெற்ற பெரியப்பா காட்சி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஒற்றை தங்க கட்டியை, மீட்பதற்காக செல்லும் ராக்கி பாய், போலீஸ் நிலைய வளாகத்தை, பெரியம்மா என்ற மிஷின் துப்பாக்கியை வைத்து துவம்சம் செய்வார். படத்தின் மிக முக்கியமான மாஸ் காட்சியாக இது அமைந்திருந்தது. இதனை குறிப்பிட்டு ஷங்கர் ட்வீட் செய்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: KGF 2