அந்நியன் இந்தி ரீமேக் சர்ச்சை - ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஷங்கர் பதிலடி

இயக்குநர் ஷங்கர் உடன் ரன்வீர் சிங்

அந்நியன் இந்தி ரீமேக் தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் அனுப்பிய கடிதத்துக்கு இயக்குநர் ஷங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

  • Share this:
2005-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் சுஜாதா எழுத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அந்நியன். இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி ரன்வீர் சிங் நடிப்பில் பென் ஸ்டுடியோஸ் ஜெயந்திலால் தயாரிப்பில் அந்நியன் இந்தி ரீமேக்கை இயக்குகிறார் ஷங்கர். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்த விவரத்தை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

அந்நியன் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதை அறிந்த படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று இயக்குநர் ஷங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “அந்நியன் இந்தி ரீமேக் செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சுஜாதாவிடம் அந்தக் கதையை முழு தொகை கொடுத்து நான் வாங்கி வைத்திருக்கிறேன். என்னிடம் தான் முழு உரிமை இருக்கிறது. ரீமேக் செய்ய வேண்டும் என்றால் என்னிடம் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் ரீமேக் செய்தால் அது சட்டப்படி குற்றம்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்திருக்கும் இயக்குநர் ஷங்கர், “ ‘அந்நியன்’ படத்துக்கு உரிமை கோரி நீங்கள் அனுப்பிய இ-மெயிலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டமே அனைவருக்குமே படத்தின் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன் தான் இந்தப் படம் திரையரங்கில் வெளியானது.

படத்தின் திரைக்கதையை எழுத நான் யாரையும் நியமிக்கவில்லை. எனவே இந்த திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. அதில் யாரும் குறுக்கிட முடியாது. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதைப் பார்த்து நான் ஆச்சர்யமானேன். அவர் இந்தப் படத்துக்கு வசனங்கள் எழுதுவதற்காக மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான அங்கீகாரமும் கொடுக்கப்பட்டுவிட்டது. அவர் திரைக்கதையிலோ, கேரக்டர் உருவாக்கத்திலோ எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி எந்த வகையிலும் அவர் ஈடுபடவில்லை.

திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கிருக்கிறது. நீங்களோ உங்கள் நிறுவனமோ எந்தவிதமான உரிமைகளையும் கோர முடியாது. படத்தை ரீமேக் செய்யவும் முடியாது. அந்த உரிமை உங்களுக்கு எழுத்துப்பூர்வமாக தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில் படத்தின் கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

‘அந்நியன்’ படம் மூலம் தயாரிப்பாளர் என்ற முறையில் கணிசமான லாபம் அடைந்துள்ளீர்கள். இப்போது உங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம் அநியாயமாக உங்களுக்கு ஆதாயம் தேடப்பார்க்கிறீர்கள்” என்று கூறியுள்ளார் ஷங்கர்.
Published by:Sheik Hanifah
First published: