நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதல்கட்டமாக ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக நாடு முழுவதுமுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அரசு மற்றும் தனியார் சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தநிலையில், மார்ச் 1-ம் தேதி முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இரண்டாவது கட்டத்தில் 60-வயதைக் கடந்தவர்களுக்கும், இணைநோய்கள் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் செல்வராகவன் தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் தெரிவித்துள்ளார். அதற்கான புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். முன்னதாக நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், குஷ்பு, ராதிகா சரத்குமார் ஆகியோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக்காயிதம் படத்தில் நடித்து வரும் செல்வராகவன் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’,‘ஆயிரத்தில் ஒருவன் 2’ ஆகிய படங்களை இயக்க இருக்கிறார். சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.