நீட் மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழ் மக்களுக்கு எதிரானது என இயக்குநர் இரஞ்சித் காட்டமாக கூறியுள்ளார்.
அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவில் நுழைந்த இரஞ்சித் நீலம் பண்பாட்டு இயக்கத்தின் மூலமாக பல்வேறு சமூகம் சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார. நீலம் பெயரில் இதழ் ஒன்றையும் அவர் வெளியிடுகிறார். நீலம் புரடக்ஷன் சார்பில் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.
சென்ற வருடம் வெளியான கர்ணன், சார்பட்டா பரம்பரை, ரைட்டர் திரைப்படங்கள் அவர் தயாரித்தவை. விரைவில் அவரது தயாரிப்பில் குதிரைவால் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கர்ணன், ரைட்டர் திரைப்படங்களை போலவே சமூகம் சார்ந்த பார்வையுடன் குதிரைவால் உருவாகியுள்ளது.
'இளைஞர்கள் பார்வையில் வடசென்னை' என்ற தலைப்பில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் பங்கேற்க வந்த இரஞ்சித் செய்தியாளர்களிடம் பேசும்போது, வடசென்னையை அழுக்கான அதிகமான மக்கள் இருக்கும் இடமாகவே பார்த்திருக்கிறோம். ஆனால் என் பார்வையில் வடசென்னை மிகவும் அழகான பகுதி. வடசென்னை மக்களுக்கு எதிரான மத்திய அரசின் போக்குகளையும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் புகைப்படங்களில் அழகியலுடன் காட்சிப்படுத்தி உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது குறித்து பேசிய அவர், நீட் மசோதா குறித்த ஆளுநரின் செயல்பாடு மிகவும் தவறானது என்றும் தமிழ் மக்கள் விரும்புகின்ற உணர்வை திருப்பி அனுப்புவது முற்றிலும் தமிழ் மக்களுக்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்தார். நீட் தேர்வு குறித்து இரஞ்சித் இதற்கு முன்பும் கருத்து கூறியுள்ளார்.
அவரைப்போலவே சூர்யா போன்ற சமூக அக்கறை உள்ள நடிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதே அவர்களின் நிலைப்பாடு. தமிழக மாணவர்களின் உரிமையான மருத்துவ இடங்களை நீட் பறிக்கிறது என்பதை பல சந்தர்ப்பங்களில் இரஞ்சித்தும், சூர்யாவும் பதிவு செய்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழக மக்களுக்கு எதிரானது என்று ஆளுநரின் செயலை அழுத்தம் திருத்தமாக கண்டித்திருக்கிறார் இரஞ்சித்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.