‘800’ பட சர்ச்சை - ஒருவர் வேடத்தில் ஒரு நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது - இயக்குநர் பேரரசு அதிரடி

ஒருவர் வேடத்தில் ஒரு நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

‘800’ பட சர்ச்சை - ஒருவர் வேடத்தில் ஒரு நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது -  இயக்குநர் பேரரசு அதிரடி
விஜய் சேதுபதி
  • Share this:
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி தொடங்கி கவிஞர்கள் தாமரை, வைரமுத்து தொட்டு தமிழ் தேசிய தலைவர்கள் சீமான், திருமுருகன் காந்தி வரை அனைவரும் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன், நடிகை ராதிகா, நடிகர் சரத்குமார் ஆகியோர் நடிப்பதில் என்ன தவறு என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக முத்தையா முரளிதரனும், தயாரிப்பு நிறுவனமும் விளக்கமும் அளித்துள்ளனர். ஆனால் எதிர்ப்பு வலுத்து வருகிறது.


இந்நிலையில் இயக்குநர் பேரரசு தனது ஃபேஸ்புக்கில் இதுகுறித்து எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, “முத்தையா முரளிதரன்
தமிழின துரோகி! விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்! அவரின் வாழ்க்கை வரலாறு படமான '800' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று இன்று தமிழ்ப் பற்றோடு பல கண்டனக்குரல்கள், எதிர்ப்புக் குரல்கள் இது வரவேற்கக்கூடிய விஷயம்தான்!

இன்று குரல் குடுக்கும் சில அரசியல்வாதிகள் 'விடுதலைப் புலிகள்' தீவிரவாத இயக்கம் என்று அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்ததே, அப்பொழுது எங்கே போனது இந்த தமிழ்ப்பற்று? தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிப்பதற்கு இங்கு சில கட்சிகளே காரணமாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக் குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை???

விடுதலைப் புலிகளையும், ,ஈழ தமிழினத்தை அழிப்பதற்கு ஒரு தேசியக் கட்சி உறுதுணையாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக்குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை??? மூன்று மணிநேர சினிமாவிற்கு இவ்வளவு எதிர்க்கும் நீங்கள், தமிழினம் அழியக்காரணாம இருந்த சில கட்சியிடம் , ஆளுவதற்கு தமிழ்நாட்டையே ஒப்படைக்க துடிக்கிறீர்களே. இப்பொழுது எங்கே போனது உங்கள் தமிழ்ப்பற்று!

ஒருவர் வேடத்தில் ஒரு சினிமா நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது! ஆனால் ஆளக்கூடாதவர்கள் ஆண்டால் இந்த நாடு சீரழிந்து விடும். இந்தப் பதிவு முத்தையா முரளிதரன்க்கு ஆதரவானது அல்ல. சில தமிழப்பற்று வேடதாரிகளுக்கு எதிரானது”. இவ்வாறு இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் பேரரசு கடந்த பிப்ரவரி மாதத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
First published: October 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading