சார்பட்டா பரம்பரை படத்துக்கு திரௌபதி இயக்குநர் மோகனின் கமெண்ட்ஸ்

பா.ரஞ்சித், மோகன்

சார்பட்டா பரம்பரை படத்தில் இயக்குநர் ரஞ்சித் சாரின் கடின உழைப்பு தெளிவாகத் தெரிகிறது என்று திரௌபதி படத்தின் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள சாப்பட்டா பரம்பரைத் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகியுள்ளது. 1970-களின் மத்தியில் சென்னை சென்ட்ரலை ஒட்டியப் பகுதியின் முக்கியக் கலாச்சாரமாக இருந்த குத்துச் சண்டையை மையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டிருந்தது. படத்தின் செய்நேர்தி காரணமாக படம் அனைத்து தரப்பினிடையேயும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் படத்தைப் பாராட்டிவருகின்றனர். ஆர்யாவும் இந்தப் படத்துக்கு மிகச் சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளார்.

  முன்னதாக 2019-ம் ஆண்டு மோகன் இயக்கிய திரௌபதி படம் வெளியானது. நாடகக் காதல் என்னும் கருத்தாக்கத்தை மையமாக வைத்து அந்தப் படம் வெளியானது. அந்தப் படம் தலித் மக்களுக்கு எதிராக இருந்தது என்று குற்றச்சாட்டு எழுந்தது. பல தரப்பினரும் அந்தப் படத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். தலித் மக்களுக்கு எதிராக ஆணவக் கொலைகள் நடைபெறும் சூழலில் இந்தப் படம் அதனை ஊக்குவிப்பது போல உள்ளது என்று பலரும் கண்டனம் செய்தனர். அந்தப் படம் குறித்து ரஞ்சித்திடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் பதிலேதும் தெரிவிக்கவில்லை.


  முன்னதாக, சார்பட்டா படம் ட்ரைலர் வெளியானபோது, இந்தப் படம் குறித்து மோகனிடம் ட்விட்டரில் ஒருவர் கருத்து கேட்டார். அதற்கு அவர், ‘ட்ரைலரில் நிறைய கடின உழைப்பையும் தரத்தையும் காண முடிகிறது. என் ஏரியா படம். படத்தின் கருத்து நன்றாக இருந்தால் படத்தை நான் கொண்டாடுவேன். 22-ம் தேதிவரை காத்திருப்போம். வாழ்த்துகள் ரஞ்சித் மற்றும் ஆர்யா’ என்று பதிவிட்டிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தநிலையில், சார்பட்டா படம் குறித்த இயக்குநர் மோகனின் ட்விட்டர் பதிவில், ‘சார்பட்டா பரம்பரையின் மொத்த குழுவும் சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர். நான் கடவுள் படத்துக்குப் பிறகு ஆர்யாவின் மிகச் சிறந்த நடிப்பு. பசுபதி, ஜான் விஜய், டேன்சிங் ரோஸ் கதாபாத்திரங்கள் கவனிக்கத் தக்கவை. இயக்குநர் ரஞ்சித் சாரின் கடின உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் உச்சம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: