தமிழ் திரை உலகின் போக்கை ஒட்டுமொத்தமாக கொரோனா ஊரடங்கு புரட்டிப் போட்டு விட்டது. திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்று இருந்த பெரிய நடிகர்களின் திரைப்படங்களும், ஓடிடியில் தஞ்சமடைய தொடங்கிவிட்டன.
கொரோனா முதல் அலையின் போது,
சூர்யாவின் சூரரைப்போற்று, ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள், நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் ஆகிய திரைப்படங்கள் நேரடி ஓடிடி ரிலீசாக வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. இதனை தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களும் தற்போது இரண்டாவது அலை அச்சம் காரணமாக ஓடிடி கதவுகளை தட்டி உள்ளன.
விஜய் சேதுபதி நடிப்பில் டெல்லி பிரசாத் இயக்கத்தில் அரசியல் நையாண்டி திரைப்படமாக உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம், திரையரங்கில் வெளியாக காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக, ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய 26 படங்களை டிஜிட்டலுக்கு மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த பணி முடிந்த பின்னர் ஓடிடி தளத்தில் வரிசையாக அந்தப் படங்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் மணிரத்னம் தற்போது தனது கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தில், கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.