தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இன்று தமிழகத்தில் புதிதாக 2,279 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 815 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
80,253 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,81,752 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1,352 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் மரணடைந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் 8,55,085 பேர் குணமடைந்துள்ளனர். 12,684 பேர் நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். விரைவில் நலம் பெற்று வலிமையுடன் திரும்புவேன் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜின் ட்விட்டர் பதிவைப் பார்த்த விஜய் ரசிகர்களும் அவரது நலம் விரும்பிகளும் விரைவில் குணமடைந்து திரும்புவீர்கள். கவலை வேண்டாம் என்று கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின் அடுத்து கமல் நடிப்பில் உருவாகும் 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.