Lingusamy: தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குநர் லிங்குசாமி!

லிங்குசாமி

லிங்குசாமி கலா ரசிகர். குறிப்பாக கவிதையின்பால் ஈடுபாடு கொண்டவர். அவரே கவிதைகள் எழுதுவார்.

  • Share this:
லிங்குசாமி இயக்குனராக 20 வருடங்ளை நிறைவு செய்துள்ளார். 2001 ஆண்டு மே 25-ம் தேதி அவரது முதல் படம் ஆனந்தம் திரைக்கு வந்தது. குடும்ப உறவுகளின் சிக்கல்களையும், மேன்மையையும் சொன்ன திரைப்படம். தமிழகத்து குடும்பங்கள் படத்தை கொண்டாட, படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. லிங்குசாமி தனது குடும்பக் கதையுடன் புனைவு சேர்த்து ஆனந்தத்தை எடுத்திருந்தார்.

நமது காலத்தில் உயரத்தையும் அதேயளவு துயரத்தையும் சந்தித்தவர் லிங்குசாமி. இயக்குனராக முதல் படமே வெற்றி. இரண்டாவது ரன். முதல் படம் குடும்பப் படம் என்றால் இரண்டாவது ஆக்ஷனும், காதலும் கலந்த அக்மார்க் டீன்ஏஜ் திருவிழா. சாக்லெட் பாயாக இருந்த மாதவனை வைத்து ரன் போன்ற கதையை யோசித்ததே ஆச்சரியம். அந்த ஷட்டர் பைட் இன்னும் பல வருடங்களுக்கு நின்று பேசும். சண்டைக் காட்சி என்றால் அடிப்பதும், விழுவதும் மட்டுமில்லை. அதற்கும் கோரியோகிராஃப் உண்டு. கச்சிதமாக செய்தால் சாதாரண சண்டையை சரித்திரத்தில் நிறுத்திவிடலாம். ரன் சண்டைக் காட்சி அதற்கு நல்ல உதாரணம்.

அஜித்தை வைத்து அவர் இயக்கிய ஜி இன்னும் அதிக வரவேற்பை பெற்றிருக்க வேண்டும். பல காரணங்களால் திட்டமிட்டபடி வெளிவராமல் காலம் தாழ்த்தி வெளியானதும் ஜி-யின் சறுக்கலுக்கு ஒரு காரணம். ஆனால், அடுத்தப் படத்திலேயே லிங்குசாமி மீண்டார். எஸ்.ராமகிருஷ்ணனுடன் சண்டக்கோழியை உருவாக்கினார். ஊரிலேயே பெரிய தாதா. அவனை ஒரு சதா நபர் அடித்துவிட்டு செல்கிறான். அவனை தேடிச் சென்ற இடத்தில், அவன் தன்னைவிட பல மடங்கு பலமிக்கவன் என்று தெரிகிறது. பாட்ஷாவின் இன்னொரு வெர்ஷன் தான் சண்டக்கோழி. உடனே காப்பியா என்று கேட்காதீர்கள். இது வேறு. குடும்பம், காதல், நட்பு, சண்டை அனைத்தும் கலந்த பெர்பெக்ட் மிக்ஸ் சண்டைக்கோழி. விஷாலுக்கு தெலுங்கில் இப்படமே ஒரு மார்க்கெட்டை உருவாக்கி தந்தது.

ஏ.எம்.ரத்னம் உச்சத்திலிருந்து படிப்படியாக இறங்கிக் கொண்டிருந்த போது அவருக்காக லிங்குசாமி பீமாவை இயக்கினார். அவர் நினைத்தது நடக்கவில்லை. பெரும் பொருட்செலவில் எடுத்த படம் தோல்வியடைந்தது. லிங்குசாமியை அனைவரும் கேள்விக்குறியுடன் பார்த்த நேரத்தில், இரண்டே வருடத்தில் அதனை ஆச்சரியக்குறியாக்கினார். கார்த்தி நடிப்பில் பையா வெளியானது. கதை என்று பெரிதாக இல்லை. சென்டிமெண்டும் அதிகமில்லை. பாடல்களுடன் ஒரு ரோடு ட்ரிப். இறுதியில் மிலிந்த் சோமனுடன் ஒரு சண்டை. படம் ஹிட். இன்றும் புத்துணர்ச்சி தரும் படமாக பையா இருக்கிறது.

அடுத்து வந்த வேட்டை சரியாகப் போகவில்லை. அதையடுத்து பெரும் பொருட்செலவில் அஞ்சான் எடுத்தார். அவர் படத்தின் முக்கிய திருப்பமாக கருதியதை பார்வையாளர்கள் ஆரம்பத்திலேயே கண்டு கொண்டார்கள். அவர் நினைத்த எதுவும் அஞ்சானில் வொர்க் அவுட் ஆகவில்லை. படம் வெளிவரும் முன், அதீத நம்பிக்கையுடன் அவர் உதிர்த்த வார்த்தைகளை வைத்து இணையத்தில் அவரை விமர்சித்தனர். கடுமையான தாக்குதலாக அது அமைந்தது. அவரது குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டனர். "ஐயா ஸ்கூல்ல எல்லோரும் இந்த மாதிரி சொல்றாங்கய்யா.." என்று தனது குழந்தைகள் வருத்தத்துடன் சொன்னதாக லிங்குசாமி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அஞ்சான் படத்தை அவரது திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருந்தது. பொருளாதார ரீதியாகவும் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அஞ்சானில் படைப்பு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்ட இழப்பை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் அவர் தயாரித்த படங்கள் ஈடு செய்தன. 2007-ல் திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் நிர்வாகத்தில் லிங்குசாமி தொடங்கினார். முதலில் தீபாவளி படத்தை தயாரித்தனர். பையா, வேட்டை, அஞ்சான் படங்களும் அவர்களின் தயாரிப்பே. முக்கியமாக பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வழக்கு எண் 18/9 படத்தை தயாரித்தார். கும்கி, இவன் வேற மாதிரி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை என இவர்கள் தயாரித்த, விநியோகித்த படங்கள் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டன. இந்த நேரத்தில்தான் கமலை வைத்து உத்தம வில்லனை தயாரித்தார். படத்தை வெளியிடும் நேரம் பல்வேறு பிரச்சனைகள். பல கோடிகளை செட்டில் செய்ய வேண்டிய நிலை. சிவகார்த்திகேயன் நடிப்பில் அவர்கள் தயாரித்து வந்த ரஜினி முருகனை கடனுக்காக விட்டுக் கொடுத்தனர். மேலும் பல கோடிகள் தேவைப்பட்டன. நண்பர்கள் உதவி செய்தனர். பல படங்களை இயக்கியும், தயாரித்தும் சம்பாதித்த பெயரும், பணமும் உத்தம வில்லனில் தகர்ந்தது. அவர்கள் தயாரிப்பில் உருவான இடம் பொருள் ஏவல் படத்தை இன்று வரை லிங்குசாமியால் வெளியிட முடியவில்லை. எல்லாம் ஒரு படத்தால் ஏற்பட்ட விளைவுகள்.
நமது காலகட்டத்தில் லிங்குசாமி அளவுக்கு பின்னடைவை சந்தித்தவர்கள் குறைவு. நண்பர்களும், அவரது தன்னம்பிக்கையுமே அவரை காப்பாற்றியது. சொந்தமாக தயாரிப்பதாக இருந்த பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர், ஆர்.பன்னீர்செல்வத்தின் நான் தான் சிவா ஆகிய படங்களை கைவிட்டார். நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு சண்டக்கோழி 2 படத்தை இயக்கினார். படம் சுமாராகவே போனது. தற்போது தமிழ், தெலுங்கில் தெலுங்கு நடிகர் ராமை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

லிங்குசாமி கலா ரசிகர். குறிப்பாக கவிதையின்பால் ஈடுபாடு கொண்டவர். அவரே கவிதைகள் எழுதுவார். மனுஷ்யபுத்திரன் போன்ற சமகால கவிகள் அவருக்கு நெருக்கமானவர்கள். லிங்குசாமி ராம் கோபால் வர்மாவால் கவரப்பட்டவர். அவரது மேக்கிங்கில் வர்மாவின் பாதிப்பை பார்க்கலாம். குறிப்பாக பாடல் காட்சிகளில். ஜி படத்தில் வரும், டிங்டாங் கோயில் மணி பாடலையும், பையாவில் வரும், என் காதல் சொல்ல தேவையில்லை பாடலையும் இனி பார்க்கும் போது கவனியுங்கள். காட்சிகள் மாறும்விதம், வெகுசிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும்.

பிருந்தாசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன் என சில எழுத்தாளர்களுடன் லிங்குசாமி பயணித்திருந்தாலும், திரைக்கதையாசிரியருக்கு அவர் கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். திரைக்கதையில் கோட்டை விடும்போதே அவருக்கு தோல்வி நேரிடுகிறது. மலையாளப்பட இயக்குனர்கள் எங்ஙனம் திரைக்கதைக்கு மெனக்கெடுகிறார்களோ, எழுத்தாளர்களை பயன்படுத்துகிறார்களோ அதேபோல் லிங்குசாமியும் தன்னை மாற்றிக் கொள்கையில் வெற்றிகள் அவரை தேடிவரும்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: