KV Anand: வீட்டில் 5 நிமிடம் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இயக்குநர் கே.வி.ஆனந்த் உடல் தகனம்

கே.வி.ஆனந்த்

குடும்பத்தினருக்கு குணமடைந்த நிலையில் நேற்று அனைவரும் மருத்துவமனை சென்று கே.வி.ஆனந்தை சந்தித்து விட்டு வந்தனர்.

  • Share this:
    தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும் பிரபல இயக்குனருமான கேவி ஆனந்த் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு கொரோனா நோய் தொற்றும் இருந்துள்ளது.

    1994-ஆம் ஆண்டு ’தென்மாவின் கொம்பத்து’ என்ற மலையாள படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார் கேவி ஆனந்த். முதல் படத்திலேயே அவருக்கு தேசிய விருது கிடைத்தது. பின்னர் முதல்வன், சிவாஜி உள்ளிட்ட பல முன்னணி திரைப்படங்களிலும் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

    2005-ஆம் ஆண்டு ’கனா கண்டேன்’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான கேவி ஆனந்த் பின்னர் அயன், மாற்றான், கவண், கோ, அனேகன் உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    20 நாட்களுக்குமுன் கேவி ஆனந்த் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். பின்னர் கடந்த வாரம் இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அனைவரும் சோதனை செய்து கொண்டனர். அப்போது இவரை தவிர மனைவி மகள்கள் இரண்டு பேர் ஆகிய மூன்று பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது.

    கே.வி. ஆனந்துக்கு நெகட்டிவ் என வந்தாலும் அவருக்கு தொடர்ச்சியாக அறிகுறிகள் இருந்து வந்துள்ளன. 24-ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அவருக்கு, சிடி ஸ்கேன் மூலம் சோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இவருக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருந்தனர்.

    குடும்பத்தினருக்கு குணமடைந்த நிலையில் நேற்று அனைவரும் மருத்துவமனை சென்று கே.வி.ஆனந்தை சந்தித்து விட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை மூன்று மணியளவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர் மரணம் அடைந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

    மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முன் கேவி ஆனந்தின் உடல் அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு 5 நிமிடங்கள் அஞ்சலிக்காக எடுத்து வரப்பட்டது. முழுவதுமாக மூடப்பட்ட உடல் ஆம்புலன்ஸ் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப் பட்டிருந்தது. குடும்பத்தினர் வெளியே இருந்தவாறே கே.வி.ஆனந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: