Home /News /entertainment /

கே.எஸ்.சேதுமாதவன்... மலையாள சினிமாவின் அழகியலை வடிவமைத்தவர்!

கே.எஸ்.சேதுமாதவன்... மலையாள சினிமாவின் அழகியலை வடிவமைத்தவர்!

கே.எஸ்.சேதுமாதவன்

கே.எஸ்.சேதுமாதவன்

சேதுமாதவனின் திரைப்படங்கள் எளிய மனிதர்களின் கதைகளை கொண்டவை. அவர்கள் ஆசைகள், கனவுகள், ஏமாற்றங்கள் என நேர்கோட்டில் பயணிப்பவை.

மலையாள சினிமாவின் புதிய அலை இயக்குனர்கள் என்று பத்மராஜன், கே.ஜி.ஜார்ஜ், ஐ.வி.சசி போன்றவர்களை மலையாளிகள் பெருமையாக குறிப்பிடுகிறார்கள். இவர்களின் காலகட்டத்தில் மலையாள சினிமா அதன் உச்சத்தை அடைந்தது. இன்று மலையாள சினிமா வந்தடைந்திருக்கும் கலாபூர்வ சாதனைக்கு துவக்கம் குறித்தவர்கள் இவர்கள்.

இவர்களின் முன்னோடியாக மலையாள சினிமாவின் திசையை நிர்ணயித்தவர்களில் கே.எஸ்.சேதுமாதவன் முக்கியமானவர். சினிமா வெகுஜன மக்களின் கலை வடிவம் என நிறுவியவை இவரது படங்கள். சாதாரண ஜனங்களின் கதைகளிலிருந்து பிறந்தவை இவரது படைப்புகள். பெரும்பாலும் பிற எழுத்தாளர்களின் ஆக்கங்களையே சேதுமாதவன் திரைப்படமாக்கினார். அவர்கள் மலையாளத்தின் முன்னணி எழுத்தாளர்கள் அல்ல. இரண்டாம் மூன்றாம் வரிசையில் வருகிறவர்கள்.

சேதுமாதவனுக்கு கேரள அரசின் சிறந்த இயக்குனருக்கான விருது பெற்றுத் தந்த அரநாழிகா நேரம் திரைப்படம், இதே பெயரில் மலையாளத்தில் எழுதப்பட்ட நாவலின் தழுவல். நாவலை எழுதியவர் பரப்பூரத் என்ற பெயரில் எழுதி வந்த கே.இ.மத்தாய். ஏராளமான சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். தீவிர இலக்கிய வாசகர்களுக்குக்கூட இவரது பெயர் இன்று தெரியாது. தகழியும், பஷீரும், எம்.டி.வாசுதேவன் நாயரும் கொண்டாடப்படும் உலகில் பரப்பூரத்துக்கு இடமில்லை. அவர் எழுதிய நாவலை படமாக்கி மூன்று விருதுகளை வென்றார் சேதுமாதவன்.

இன்னொரு திரைப்படம் சட்டக்காரி. மலையாள புதிய அலை சினிமாவின் மையமாக விளங்கும் காமம் தான் சட்டக்காரியின் மையமும். இதுவும் நாவலில் இருந்து எடுக்கப்பட்டது. எழுதியவர் பம்மன். அன்று அந்தப் பெயர் பலான புத்தகங்களை எழுதுகிறவர் என்றே அறியப்பட்டிருந்தது. சட்டக்காரி படத்தில் லட்சுமி நடித்திருந்தார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு. 1974-ல் சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருதை இந்தப் படம் அவருக்கு பெற்றுத் தந்தது. கேரள அரசின் இரண்டாவது சிறந்த திரைப்படமாகவும் அவ்வருடம் தேர்வு செய்யப்பட்டது. பிறகு இதனை ஜுலி என்ற பெயரில் இந்தியில் சேதுமாதவன் இயக்கினார்.

சேதுமாதவனின் திரைப்படங்கள் எளிய மனிதர்களின் கதைகளை கொண்டவை. அவர்கள் ஆசைகள், கனவுகள், ஏமாற்றங்கள் என நேர்கோட்டில் பயணிப்பவை. மலையாள சினிமாவுக்கான அழகியலை உருவாக்கித் தந்தவை அவரது படங்கள். அன்று மலையாள சினிமாவின் சிகரத்தில் இருந்தவர் சத்யன். இன்றைய மலையாள சினிமாவின் உருவாக்கத்தில் பிரேம் நசீர் அளவுக்கு சத்யனுக்கும் இடமுண்டு. அன்று மலையாளிகளின் உயிராக இருந்தார் சத்யன். அவரை வைத்து சேதுமாதவன் பல படங்கள் இயக்கியிருக்கிறார். கடைசியாக இயக்கியது கரைகாணாக்கடல். இதுவும் நாவல்தான். முட்டத்து வர்க்கி என்ற பாப்புலர் எழுத்தாளார் எழுதியது. நாயகனின் மகள் முதலாளியின் மகனால் ஏமாற்றப்பட்டு மரணமடையும் எளிய கதை. கதாபாத்திரங்களின் உணர்வுகளை நுட்பமாக சித்தரித்த விதத்தில் கரைகாணாக்கடல் விருதுகளையும், பாராட்டையும் பெற்றது. இந்தப் படம் சத்யன் விபத்தில் இறந்ததையொட்டி வெளியாகி பெரு வெற்றியை பெற்றது.

சேதுமாதவன் இயக்கிய ஒவ்வொரு திரைப்படங்களுக்குப் பின்னும் ஒரு கதையுண்டு. மலையாள சினிமா எப்படி ஒவ்வொரு இழையாக வடிவமைக்கப்பட்டு இன்றைய அழகியலை வந்தடைந்தது என்ற கதை. மலையாள சினிமா இருக்கும் வரை சேதுமாதவனின் பெயர்  நிலைத்திருக்கும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி