Director Balu Mahendra: இயக்குநர் பாலுமகேந்திராவின் நிறைவேறாத ஆசைகள்!

பாலுமகேந்திரா

பாலுமகேந்திராவிடமிருந்து உருவான பாலா, வெற்றிமாறன், சீனு ராமசாமி ஆகியோர் தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

  • Share this:
திரைப்படக்கலையை முறைப்படி பயின்று, அதன்படி படம் எடுத்த தமிழின் சொற்ப இயக்குனர்களில் ஒருவர் மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா. அவரைக் குறித்த நினைவுகள் அவரது படங்கள் தரும் அனுபவங்களைப் போன்று மாறாத பசுமை நிறைந்தவை.

பாலுமகேந்திராவின் பூர்வீகம் இலங்கை. சிறுவனாக இருந்த போது டேவிட் லீனின் உலகப் புகழ்பெற்ற திரைப்படமான, 'தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வய்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்தது. Kelani ஆற்றில் நடந்த படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்க செல்கிறார் பாலுமகேந்திரா. இயக்குனர் 'ரெயின்' என்று சொல்ல, உடனே மழை பெய்கிறது. அதைப் பார்க்கும் சிறுவன் பாலுமகேந்திரா இயக்குனர் என்பவர் ஒரு மெஜிஷியன் என எண்ணிக் கொள்கிறார். அந்த மெஜிஷியனைப் போல ஆக வேண்டும் என் தீர்மானிக்கிறார். சினிமாவுக்கான முதல்விதை அங்கு விதைக்கப்படுகிறது.

புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இயக்குனர் பிரிவில் படிக்க விண்ணப்பிக்கிறார். அவருக்கு அந்தப் பிரிவில் இடம் கிடைக்கவில்லை. அவர் எடுத்திருந்த புகைப்படங்களைப் பார்க்கும் தேர்வுக்குழுவில் உள்ளவர், 'உன்னுடைய புகைப்படங்கள், அதில் உள்ள ப்ரேம் சென்ஸ் எல்லாம் நன்றாக இருக்கிறது. நீ ஏன் சினிமோட்டோகிராஃபி படிக்கக் கூடாது' என்று கேட்க, வேறு வழியின்றி அதில் சேர்கிறார். தன்னுடைய நோக்கம் இயக்கம், அதனால் தான், சினிமோட்டோகிராஃபராக பிற இயக்குனர்களுடன் என்னால் அதிகம் இணங்கிப் போக முடியவில்லை என பாலுமகேந்திரா கூறியுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை சினிமா என்பது சதுரம். 35 எம்எம்-ல் மட்டுமே படங்கள் எடுத்தார். சினிமாஸ்கோப் பற்றி பேசும்போதும் சதுரம் தான் அவர் மனதில் இருக்கும். காலியாக இருக்கிற இரண்டு பக்கத்திலும் என்ன பண்ணுவீங்க என்று கேட்டிருக்கிறார். அது ஒரு கனாக்காலம் தவிர்த்து மற்ற படங்கள் அனைத்தையும் 35 எம்எம்-லேயே எடுத்தார்.

பாலுமகேந்திரா என்றதும் நினைவுக்கு வரும் பல விஷயங்களில் ஒன்று, அவரது நாயகிகள். வெள்ளைத் தோல் அழகிகள் அணிவகுத்த சினிமாவில் கருப்பழகிகளை அறிமுகப்படுத்தியவர். இதுகுறித்து கேட்ட போது, அது என் ஈழத்து நினைவு என்று பதிலளித்தார். ஈழத்தமிழரான அவர் ஈழம் குறித்து அதிகம் பொதுவெளியில் பேசியதில்லை. அதுபற்றி திரைப்படம் எடுத்ததில்லை. ஈழம் அவரது மனக்கொந்தளிப்பான விஷயமாக கடைசிவரை இருந்தது. பேட்டியொன்றில் ஈழம் குறித்த கேள்விக்கு பதில் சொல்கையில் அழுதிருக்கிறார். ஈழத்திலிருந்து வரும் படைப்புகள், படைப்பாளிகள் குறித்து நெருக்கமாக அறிந்திருந்தார். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் கவிஞரும், பாடலாசிரியமான தேன்மொழி தாஸின் முதல் கவிதைத் தொகுப்பான 'இசையில்லா இலையில்லை' வெளியீட்டு விழாவில் ஈழக்கவிஞரின் கவிதைகளை தேன்மொழி தாஸின் கவிதைகளுடன் ஒப்பிட்டுப் பேசினார் பாலுமகேந்திரா.

கடைசிவரை தனது சந்தை மதிப்பை அவர் அறிந்திருக்கவில்லை. பணக்கஷ்டம் ஏற்பட்டு, சமாளிக்க முடியாமல் கமலிடம் செல்கிறார். கமலோ வந்த விஷயத்தை பேச விடாமல் சினிமா குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். 'சரி, இவர் கிட்ட கேட்க வேண்டாம், பிரயோஜனமில்லை' என்று கிளம்ப நினைக்கிற நேரம், பத்து லட்சத்துக்கான செக்கை பாலுமகேந்திராவிடம் தந்து, எனக்கு ஒரு படம் பண்ணித் தரணும் என்று கேட்கிறார் கமல். இந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி பேசிய பாலுமகேந்திரா, எனக்கு பணத்தேவை இருப்பதை அறிந்து, அதை இனாமாக கொடுத்தால் என்னுடைய கௌரவத்துக்கு இழுக்கு என்று, படம் பண்ணித் தரச் சொல்லி பத்து லட்சம் தந்தார் என்று குறிப்பிட்டார். அந்தப் படம்தான் சதிலீலாவதி.

அந்தப் படத்துக்கு கமல் பாலுமகேந்திராவுக்கு நிர்ணயித்த சம்பளம் 35 லட்சங்கள். இதைக் கேட்டதும் பாலுமகேந்திராவுக்கு கடும் கோபம். குறைவாக தந்து விட்டோமோ என நினைக்கிறார் கமல். பாலுமகேந்திராவோ தனது உதவியாளர்களிடம் வந்து கத்துகிறார். "கமல் என்னை ஃபூல் பண்ணலாம்னு நினைக்கிறார். எனக்கு 35 லட்சம் சம்பளமாம். யாரு எனக்கு அவ்வளவு சம்பளம் தருவாங்க? என்னை என்ன முட்டாள்னு நினைக்கிறாரா?" இன்று இரண்டு ஹிட் கொடுத்த இயக்குனர்கள் மூன்றாவது படத்துக்கு பதினைந்து கோடி கேட்கிறார்கள். நல்லவேளை பாலுமகேந்திரா இப்போது இல்லை.

பாலுமகேந்திராவிடமிருந்து உருவான பாலா, வெற்றிமாறன், சீனு ராமசாமி ஆகியோர் தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள். பாடலாசிரியர் நா.முத்துகுமாரும் ஆரம்பத்தில் அவரிடம் உதவி இயக்குனராக இருந்தார். பாலுமகேந்திராவுடம் நெருக்கமாக பயணித்து அவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர் இயக்குனர் ராம். பாலுமகேந்திராவின் திரைப்பட பள்ளியிலிருந்து ஏராளமானவர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். அவர்களை பாலுமகேந்திரா செதுக்கும் விதம் அலாதியானது. உதவி இயக்குனர்கள் தினம் ஒரு கதையாவது படிக்க வேண்டும். அந்தக் கதை குறித்த தங்களின் பார்வையை அன்றே எழுதித்தர வேண்டும். இது 365 நாளும் நடக்கும் பயிற்சி. அதனால், அவரிடம் உதவி இயக்குனராக இருப்பவர்கள் இயல்பாகவே படிப்பாளியாகவும் மாறுகிறார்கள். பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள். தனது திரைப்பட பள்ளியில் சிறந்ததொரு நூலகத்தை வைத்திருந்தார். நூலகத்தை சுற்றிக் காட்டும் அதே ஈடுபாட்டுடன் சமையலறையையும், ஒவ்வொரு தளத்திலும் எத்தனை கழிவறைகள் உள்ளது என்பதையும் கூறுவார். சமையலை அவர் ஒரு கலை என்றே கருதினார்.

நிறைவேறாத பல ஆசைகள் அவருக்கிருந்தன. முக்கியமாக, ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய சின்னச் சின்ன படங்களை எடுக்க வேண்டும் என்று விரும்பினார். பாலா, வெற்றிமாறனையும் அதுபோன்ற படங்களை இயக்க வைக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. வெற்றிமாறன் லாக்கப் நாவலை ஒரு மணிநேரம் ஓடக்கூடிய படமாகவே எடுத்தார். அப்போது, ஒருமணி நேர படத்தை சந்தைப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு இல்லாததால், இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளை தானே எழுதி அதனை முழுநீளத் திரைப்படமாக்கினார்.

தொலைக்காட்சிக்காக பாலுமகேந்திரா இயக்கிய கதைநேரம் எந்தமொழி படைப்புகளுடனும் ஒப்பிடத்தகுந்தவை. அவர் காலத்தில் ஓடிடி தளங்கள் இல்லை. இருந்திருந்தால், அதில் முத்திரை பதித்திருப்பார். ஓடிடி அவருக்கேற்ற தளம். இனத்தையும், மொழியையும், கலையையும் மனதார நேசித்த கலைஞன். அவரிடமிருந்து சினிமாவை கற்றுக் கொள்ள முடிந்தவர்கள் பாக்கியசாலிகள்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: