முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அதுக்காக அப்படியேவா? பத்மினியின் படத்தை காப்பியடித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்?

அதுக்காக அப்படியேவா? பத்மினியின் படத்தை காப்பியடித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்?

பத்மினி

பத்மினி

இளம் பெண்ணான பத்மினிக்கு நடிப்பு என்றால் உயிர். நாடகத்தில் வீரமாக பேச வேண்டும், சோகமாக நடிக்க வேண்டும் என கனவு காண்கிறவர். ஒருகட்டத்தில், நடிக்கப் போகிறேன், கதாநாயகியாகத்தான் திரும்புவேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, நாடகத்தில் நடிக்கும் தனது தோழி குமுதத்துடன் சென்றுவிடுவார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் முதலியார் 1955 இல் கதாநாயகி என்ற படத்தை தயாரித்தார். டி.கே.கோவிந்தன் திரைக்கதை அமைத்து, வசனம் எழுத, கே.ராம்நாத் படத்தை இயக்கினார்.

கதாநாயகி ஒரு நாயகி மையப் படம். இளம் பெண்ணான பத்மினிக்கு நடிப்பு என்றால் உயிர். நாடகத்தில் வீரமாக பேச வேண்டும், சோகமாக நடிக்க வேண்டும் என கனவு காண்கிறவர். ஒருகட்டத்தில், நடிக்கப் போகிறேன், கதாநாயகியாகத்தான் திரும்புவேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, நாடகத்தில் நடிக்கும் தனது தோழி குமுதத்துடன் சென்றுவிடுவார். குமுதம் வேலை செய்யும் நாடகக் கம்பெனியின் முதலாளி கே.ஏ.தங்கவேலு. வாய்ப்புகள் இல்லாமல் நாடகக் கம்பெனி ஈயோட்டிக் கொண்டிருக்கும். கடன்காரர்களுக்குப் பயந்து வாழ்கிற சூழலில் அவர்களுடன் ஒருவராக பத்மினியும் ஒட்டிக் கொள்வார்.

கம்பெனி நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கையில் அதில் நடிப்பவர்கள் மட்டும் சுகபோகமாகவா வாழ முடியும்? குமுதம் துணி வாங்கியவகையில் சேட்டுக்கு பெரும் தொகை தர வேண்டியிருக்கும். இப்படியொரு சூழலில் கோடீஸ்வரரான டி.ஆர்.ராமச்சந்திரன் அவருக்கே தெரியாமல் இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிடுவார்.

டி.ஆர்.ராமச்சந்திரன் பணக்காரர், முற்போக்குவாதி. டிரைவர் இல்லாமல் கார் ஓடணும், நோய் இல்லாமல் மனுஷன் வாழணும் என்று கனவு காண்கிறவர். பறக்கும் தட்டு ஆராய்ச்சி, மருந்து ஆராய்ச்சி என்று அட்டவணைப் போட்டு வேலை பார்க்கிறவர். அவரது இரு அத்தைகள் - அங்கம்மா, மங்கம்மா - தங்களது பெண்களை எப்படியாவது டி.ஆர்.ராமச்சந்திரன் தலையில் கட்டி வைக்கப் பார்ப்பார்கள். கலை, ரசனை, பெண் ஆகிய வாடைகளே ஆகாத டி.ஆர்.ஆர். இவர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டு வருவார்.

முதல்நாள் நாடக ரிகர்சலுக்கு நேரமாகிவிட, வழியில் வரும் காரில் லிப்ட் கேட்டு நாடகக் கம்பெனிக்கு வருவார் பத்மினி. அந்தக் கார் டி.ஆர்.ராமச்சந்திரனுடையது. அவருக்கும், பத்மினிக்கும் காதல் என்று நாடகக் கம்பெனியில் தகவல் பரவி, அது கே.ஏ.தங்கவேலு காதுவரைக்கும் செல்லும். பத்மினியின் கோடீஸ்வர காதலனை வைத்து தனது கடன்களை அடைக்க திட்டமிடும் அவர், பத்மினிக்கு கதாநாயகி வேஷம் தருவார்.

இதனிடையில் பத்மினியும், அவரது தோழியும் வாங்கிய துணிக்கடை பில், டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு அனுப்பி வைக்கப்படும். எதையும் ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ளும் அவர், நேராக பத்மினியிடம் வருவார். அவரை பத்திரிகையாளர் என தவறாக நினைத்து, டி.ஆர்.ராமச்சந்திரனும், தானும் காதலர்கள் என்பார். பத்மினியின் பேச்சும், அழகும் அவரை கவர்ந்துவிட தான்தான் பத்மினி காதலிப்பதாகச் சொல்லும் கோடீஸ்வரர் என்பதை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்.

கே.ஏ.தங்கவேலு தனக்கு கடன் தந்தவர்களை சமாளிக்க, தனது நாடகத்தில் கதாநாயகியாக நடிக்கும் பத்மினியின் காதலர்தான் கோடீஸ்வரர் டி.ஆர்.ஆர். என்பார். அவர்கள் நம்ப மாட்டார்கள். அவர்களை நம்ப வைப்பதற்காக ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்து, பத்மினியை அவரது காதலருடன் கலந்து கொள்ள சொல்வார்.

டி.ஆர்.ராமச்சந்திரன்தான் அந்த கோடீஸ்வரர் என்பது தெரியாமல், அவரையே அவரைப் போல் வேஷம் போட்டு பார்ட்டிக்கு அழைத்து வருவார் பத்மினி. அதன் பிறகு அவரிடம், தான் டி.ஆர்.ராமச்சந்திரனைப் பார்த்ததுகூட இல்லை என்ற உண்மையை சொல்வார். தன்னிடம் பணம் கேட்கும் கே.ஏ.தங்கவேலுக்கு டி.ஆர்.ராமச்சந்திரன் பத்தாயிரம் ரூபாய்க்கு செக் தருவார்.

அவரை பத்திரிகையாளர் என நினைக்கும் பத்மினி, அது போலி செக், அதைத் தந்தவர் உண்மையான கோடீஸ்வரர் இல்லை, பத்திரிகையாளர் என்பார். இறுதியில் அனைவரும் உண்மையை அறிந்து பத்மினியும், டி.ஆர்.ராமச்சந்திரனும் ஒன்றிணைவார்கள்.

கதாநாயகி ஒரு முழுநீள நகைச்சுவைப் படம். வயது வந்த பெண், நாடகத்தில் சேரப் போகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற பிறகும், அவரது அப்பா, அம்மா பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். நாடக கம்பெனியின் பசியும், பட்டினியும்கூட  நகைச்சுவை இழையோட சொல்லப்பட்டிருக்கும். பத்மினியும், கே.ஏ.தங்கவேலுவும்தான் படத்தின் பிரதான தூண்கள். பத்மினி இவ்வளவு அருமையாக நகைச்சுவை செய்வாரா என்று யாரும் ஆச்சரியப்பட்டு போவார்கள். படத்தின் இன்னோர் அருமையான விஷயம் வசனங்கள். நகைச்சுவைப் படத்திற்கேற்ப அட்டகாசமாக  எழுதப்பட்டிருக்கும்.

ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி படத்தின் காதல் எபிசோடை அப்படியே கதாநாயகி படத்திலிருந்து உருவி வைத்துக் கொண்டதாகவும், அதில் வரும் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் பகுதி கிறிஸ்டோபர் நோலனின் மெமன்டோ படத்திலிருந்து எடுத்தாகவும் விமர்சனம் எழுந்தது. அதேபோல காதல் காட்சிகள் கதாநாயகி படத்திலிருந்து எடுத்தாகவும் இரண்டுக்குமே கிரெடிட் தரவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது.

கதாநாயகி வெளியானபோது பெரிய வெற்றியை பெறவில்லை என்பது ஆச்சரியம். இன்றும்கூட குடும்பத்துடன் பார்த்து  சிரித்து மகிழ கதாநாயகி நல்ல தேர்வாக இருக்கும். 1955, பிப்ரவரி 19 வெளியான கதாநாயகி நாளை 68 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

First published:

Tags: AR Murugadoss, Classic Tamil Cinema