KV Anand: கே.வி.ஆனந்த் - பாதியில் மறைந்த பீனிக்ஸ் பறவை

கே.வி.ஆனந்த்

இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கையில் 2005-ல் கனா கண்டேன் படத்தின் மூலம் கே.வி.ஆனந்த் இயக்குநரானார்.

 • Share this:
  கே.வி.ஆனந்த் மறைந்துவிட்டார். 54 வயதில், படைப்பூக்கத்தின் உச்சியில் மறைவு என்பதை மனம் ஏற்கவில்லை. கிரேஸி மோகன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், விவேக், தாமிரா இன்று கே.வி.ஆனந்த் என தமிழ் சினிமா தனது முக்கிய கலைஞர்களை இழந்து வருகிறது. இது ஊழியின் தாண்டவமோ?

  புகைப்படக் கலைஞர்:

  கே.வி.ஆனந்த் சென்னைக்காரர்.  இயற்பியலில் டிகிரி வாங்கிவிட்டு, லயோலாவில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். ட்ரெக்கிங்கில் நாட்டமிருந்தது. பல பகுதிகளுக்கு சென்றார். அந்தப் பயணம் போட்டோகிராபி மீதான ஆர்வத்தை அதிகரித்தது. சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்களின் அட்டைப் படங்களுக்கு விதவிதமான புகைப்படங்கள் எடுத்தார். கல்கி, இந்தியா டுடே, விகடன் குழுமம் என பல பத்திரிகைகளுக்கு ப்ரீலான்ஸ் போட்டோகிராபராக பணியாற்றினார். ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற லட்சியத்தில் அவர் சந்தித்தது பி.சி.ஸ்ரீராமை. ஏற்கனவே ஜீவா போன்ற முதல்நிலை அசிஸ்டெண்டுகள் இருக்கையில் எட்டாவது அசிஸ்டெண்டாக சேர்ந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கோபுரவாசலிலே, அமரன், மீரா, தேவர் மகன், திருடா திருடா படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

  முதல் வாய்ப்பு

  ப்ரியதர்ஷன் மலையாளத்தில் மோகன்லால், சீனிவாசன், மீனா நடிப்பில் ஒரு படத்தை ஆரம்பித்தார். கோபுரவாசலிலே படத்தில் பி.சி.ஸ்ரீராம் பணியாற்றியிருந்ததால் அவரை அணுகினார். வேறு படங்களில் பிஸியாக இருந்ததால், அவர் தனது உதவி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான கே.வி.ஆனந்தை பரிந்துரைத்தார். அந்த நேரத்தில் தனது திறமையால் பி.சி.ஸ்ரீராமின் விருப்பத்துக்குரியவராக கே.வி.ஆனந்த் மாறியிருந்தார். அப்படி குருவின் பரிந்துரையில் முதல் படம் கிடைத்தது. அதுதான் தேன்மாவின் கொம்பத்து. அப்படம் கே.வி.ஆனந்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

  முத்திரை பதித்த படங்கள்

  முதல் படம் வெளியான அதே 1994-ஆம் ஆண்டு, மின்னாரம் மலையாளப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அதன் பிறகு வாய்ப்புகள் கொட்டின. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மொழிகளில் பிஸியானார். காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், தி லெஜென்ட் ஆஃப் பகத்சிங், பாய்ஸ், செல்லமே என கே.வி.ஆனந்தின் பெயர் சொல்லும் படங்கள் ஏராளம். இயக்குநரான பிறகு அவர் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதை தவிர்த்தார். ஏவிஎம் சரவணன், ஷங்கர் இருவரது வற்புறுத்தல் காரணமாக சிவாஜி படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். ஒரு வணிக சினிமாவுக்கு ஒளிப்பதிவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அகராதி அப்படம்.

  இயக்குநர் அவதாரம்:

  இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கையில் 2005-ல் கனா கண்டேன் படத்தின் மூலம் கே.வி.ஆனந்த் இயக்குநரானார். எழுத்தாளர் சுபாவின் நாவல்களுக்கு விதவிதமான அட்டைப் படங்கள் எடுத்துத் தந்த காலத்திலேயே சுபாவுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது. அவர்களின் உதவியுடன் கனா கண்டேன் கதை உருவாகியது. படம் சுமாராகப் போனாலும், வித்தியாசமான கதை அனைவரையும் கவர்ந்தது. அடுத்தப் படம் அயன். சூர்யாவின் கரியரில் அது மிகப்பெரிய வெற்றிப்படமானது. வழக்கமான கமர்ஷியல் படம் என்றாலும் குண்டுச்சட்டிக்குள் ஓடாமல் வித்தியாசமான கதையை நோக்கி செல்வது கே.வி.ஆனந்தின் பாணி. அப்படித்தான் கோ வெளியானது. அடுத்தடுத்து பம்பர் ஹிட். அதையடுத்து மாற்றான், அனகேன் படங்கள். வித்தியாசமான கதைக்களம், கதாபாத்திரங்கள். எனினும் அலைபாய்ந்த திரைக்கதையால் இவை இரண்டும் சுமாராகவே போனது. அதையடுத்து நிறுத்தி நிதானமாக தனக்குத் தெரிந்த மீடியா தொழிலின் பின்னணியில் கவண் படத்தை எடுத்தார். இந்தமுறை சுபாவுடன் கபிலன் வைரமுத்துவையும் சேர்த்துக் கொண்டார். படம் சராசரி வெற்றியை பெற்றது. அதையடுத்து மீண்டும் சூர்யா - மோகன்லால் என்று பெரிய கேன்வாஸுக்கு மாறி காப்பான் எடுத்தார். இந்தமுறை சுபாவை தவிர்த்து முதல்முறையாக பட்டுக்கோட்டை பிரபாகருடன் கைகோர்த்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

  விஜய், துல்கர் சல்மான் என சிலரை மனதில் வைத்து கதைகள் உருவாக்கி வந்த நிலையில் கே.விஆனந்தின் எதிர்பாராத மரணம் சம்பவித்துள்ளது. சாதாரண புகைப்படக் கலைஞராக வாழ்வை தொடங்கியவர் தனது சொந்த ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர், இயக்குநர் என அடுத்தடுத்த தளங்களை எட்டினார். முயன்றால் எதுவும் எட்டக் கூடிய எல்லையே என்பதை தனது வாழ்வின் மூலம் நிரூபித்த பீனிக்ஸ் பறவை அவர். பாதியிலேயே அவர் மறைந்தது கலைக்கும், இந்திய திரையுலகுக்கும் பேரிழப்பு,  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: