அரசியல்வாதியுடன் சேர்ந்து படம் எடுப்பதா? என்ற எனது ஐயத்தை தகர்த்தெறிந்தவர் - ஜெ.அன்பழகன் மறைவுக்கு அமீர் இரங்கல்

மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு இயக்குநர் அமீர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசியல்வாதியுடன் சேர்ந்து படம் எடுப்பதா? என்ற எனது ஐயத்தை தகர்த்தெறிந்தவர் - ஜெ.அன்பழகன் மறைவுக்கு அமீர் இரங்கல்
இயக்குநர் அமீர் | ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ
  • Share this:
மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இயக்குநர் அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ஆதிபகவன் படத்தை தயாரித்திருந்தார். மேலும் அதே ஆண்டு வெளியான ‘யாருடா மகேஷ்’ படத்தை விநியோகம் செய்தார். தொடர்ந்து திரைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தலைவா பட பிரச்னையின் போது தமிழகம் முழுவது 300 திரையரங்குகளில் படத்தை வெளியிடத் தயார் என்றும் அறிவித்தார்.

ஜெ. அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் இயக்குநர் அமீர், “எனதருமை அண்ணனும் திமுக எம்.எல்.ஏ.வுமான ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்கிற செய்தியை கேட்டறிந்த நாளில் இருந்தே மனம் வேதனைப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரது மகன் ராஜா அன்பழகனிடம் அண்ணனின் உடல் நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்துக்கொண்டே இருந்தேன்.

இந்நிலையில் இன்று காலை அண்ணனின் மறைவுச் செய்தி குறித்து கேட்ட நிமிடம் முதல் இப்போது வரை அந்த உண்மைச் செய்தியை ஏற்க என் மனம் மறுக்கிறது. காரணம் அவரின் பழகும் தன்மை, நேர்மையான பேச்சு, அரசியலற்ற அன்பு, உண்மையைச் சொல்லும் துணிச்சல், எதிரே இருப்பவரின் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்த்து முடிவெடுக்கும் பண்பு என சொல்லிக்கொண்டே போகலாம் அவரிடம் நிறைந்திருந்த பல்வேறு குணாதிசயங்களை.


ஒரு அரசியல்வாதியுடன் சேர்ந்து படம் எடுப்பதா என்கிற என்னுடைய ஐயத்தை எங்கள் முதல் சந்திப்பிலேயே தகர்த்தெரிந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நட்பை வளர்த்து என் உள்ளத்தில் குடி புகுந்து கொண்ட ஆளுமை அவர். ஒரு நல்ல தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக, தயாரிப்பாளர் சங்கத்தின் மீது அக்கறை கொண்டவராக, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற தொலை நோக்கு சிந்தனை கொண்டவராக இப்படி பல கோணங்களில் அவரை நான் வெகு அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை இன்று நான் இழந்திருக்கிறேன் என்கிற வேதனையோடு மட்டுமல்லாமல் அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவுகளின் உள்ளத்தில் சாந்தியையும் அவரது இறப்பிற்குப் பின் உள்ள வாழ்க்கையில் அமைதியையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” இவ்வாறு இயக்குநர் அமீர் வெளியிட்டிருக்கும் இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நல்லடக்கம் செய்யப்பட்டது அன்பழகன் உடல்
First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading