ஒரு நடிகர் நாயகனாக நடித்த இரு படங்கள் ஒரே நாளில் வெளியாவதே அபூர்வம். சிவாஜி கணேசன் அபூர்வங்களை படைத்த கலைஞன், ஆகவே அவரது நடிப்பில் 17 முறை ஒரேநாளில் இரு படங்கள் வெளியாகி பலமுறை இரு படங்களும் 100 நாள்கள் ஓடியிருக்கின்றன. ஜெமினி கணேசனுக்கு இருமுறை அப்படி நிகழ்ந்திருக்கிறது. எம்ஜிஆர் படங்கள் அப்படி ஒரே நாளில் வெளியானதில்லை. அன்பே வா, நான் ஆணையிட்டால் இரண்டும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டது. ஆனால், எம்ஜிஆர், நான் ஆணையிட்டால் படத்தை தள்ளி வைத்து, தனது இரு படங்கள் ஒரேநாளில் வெளியாவதை தவிர்த்தார். இதில் சத்யராஜ் - மணிவண்ணன் கூட்டணி செய்தது யாரும் செய்திராத சாதனை. ஒரு இயக்குனரின் இரண்டு படங்கள், ஒரே நடிகர் நடித்தது ஒரே நாளில் வெளியானது இவர்களுக்குதான்.
1986 தீபாவளி இதுவரை வந்த தீபாவளிகளிலேயே கொஞ்சம் ஸ்பெஷல். அந்த தீபாவளிக்கு 10 திரைப்படங்கள் வெளியாகின. சிவாஜி போன்ற போன தலைமுறை நடிகரின் படமும் இருந்தது. கமல், ரஜினி போன்ற அடுத்தத் தலைமுறை நடிகர்களின் படங்களும் இருந்தன. விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் போன்றவர்களின் படங்களும் வெளிவந்தன. இந்த கதம்பத் தீபாவளியில்தான் அந்த சாதனையும் நடந்தது.
1986 இல் ஐ.வி.சசி இயக்கத்தில் வார்த்தா என்ற மலையாளப் படம் வெளியானது. மம்முட்டி, மோகன்லால், ரகுமான், சீமா நடித்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய, அதனை கலைஞரின் திரைக்கதை வசனத்தில் சுடச்சுட தமிழில் ரீமேக் செய்தார் மணிவண்ணன். சத்யராஜ், பிரபு, லட்சுமி, நளினி நடிப்பில் பாலைவன ரோஜாக்கள் என்ற பெயரில் 1986 நவம்பர் 1 அப்படம் திரைக்கு வந்து 100 நாள்கள் ஓடியது. அதேநாளில், மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், ஜெஸ்ரீ, சுஜாதா நடித்த த்ரில்லர் படம் விடிஞ்சா கல்யாணமும் வெளியானது. ஒரே நாளில் ஒரு நடிகரின் இரண்டு படங்கள் வெளியாவதே ரிஸ்க். இது தீபாவளி. சிவாஜி, கமல், ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் நாள். அன்று சத்யராஜ் நடிப்பில், மணிவண்ணன் இயக்கிய இரு படங்கள் வெளியானது அதிசயம். விடிஞ்சா கல்யாணமும் கமர்ஷியலாக வெற்றி பெற்றது இன்னொரு ஆச்சரியம். அத்துடன் அந்த தீபாவளியின் ஆச்சரியம் நிற்கவில்லை. அதேநாளில் விஜயகாந்த் நடித்த தர்மதேவதை, தழுவாத கைகள் என இரு படங்கள் வெளியாகின. அதன்பிறகு அப்படியொரு நிகழ்வு விஜயகாந்தின் சினிமா சரித்திரத்தில் நிகழவில்லை.
அந்த தீபாவளிக்கு பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம் படங்களுடன் வெளியான பிற படங்கள்...
1. ஆயிரம் கண்ணுடையாள் - (இயக்கம் - கே.சங்கர், நடிப்பு - பத்மினி, ஜீவிதா, பேபி ஷாலினி)
2. அறுவடை நாள் - (இயக்கம் - ஜி.எம்.குமார், நடிப்பு - பிரபு, பல்லவி, ராம்குமார்) படம் வெற்றி.
3. தர்ம தேவதை - (இயக்கம் - எஸ்.பி.முத்துராமன், நடிப்பு - விஜயகாந்த், ராதிகா, பல்லவி)
4. கண்ணுக்கு மை அழகு - (இயக்கம் - மகேந்திரன், நடிப்பு - பானுமதி, சுஜாதா, சரத்பாபு)
5. லட்சுமி வந்தாச்சு - (இயக்கம் - ராஜசேகர், நடிப்பு சிவாஜி கணேசன், பத்மினி, ரேவதி) படம் வெற்றி.
6. மாவீரன் - (இயக்கம் - ராஜசேகர், நடிப்பு - ரஜினி, அம்பிகா) படம் தோல்வி
7. புன்னகை மன்னன் - (இயக்கம் - பாலசந்தர், நடிப்பு - கமல், ரேவதி, ரேகா) படம் வெற்றி.
8. தழுவாத கைகள் - (இயக்கம் - ஆர்.சுந்தர்ராஜன், நடிப்பு - விஜயகாந்த், அம்பிகா) படம் வெற்றி.
2023 பொங்கலுக்கு விஜய், அஜித் என இரண்டே நடிகர்களின் படங்களே வெளியாகின. அதற்கே, இரண்டும் தனித்தனியாக வெளியாகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது வசூலை பாதிக்கும் என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன். அந்தளவுக்கு இன்று திரைப்பட வர்த்தகம் மாறிப் போயுள்ளது. 1986 ஐப் போல் ஒரு தீபாவளியை இனி தமிழ் சினிமா கனவுகூட காண முடியாது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.