• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Dilip Kumar: திலீப் குமார் - இந்திய சினிமாவின் ட்ராஜடி கிங்!

Dilip Kumar: திலீப் குமார் - இந்திய சினிமாவின் ட்ராஜடி கிங்!

திலீப் குமார்

திலீப் குமார்

எட்டுமுறை நடிப்புக்கான ஃபிலிம் பேர் விருது வாங்கினார். 1950-களிலேயே அவர் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார். இந்திய திரையுலகில் முதலில் லட்ச ரூபாய் சம்பளம் பெற்றது அவர் தான்.

  • Share this:
திலீப் குமார் தனது 98-வது வயதில் காலமாகியிருக்கிறார். பல பத்து வருடங்கள் இந்தித் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர். மறக்க முடியாத பல காவியங்களை தந்தவர். கமல்ஹாசன் போன்ற திறமையான நடிகர்களின் ஆதர்சமாக திகழ்ந்தவர். திலீப் குமாரின் வாழ்க்கையே ஒரு திரைப்படம் போலத்தான். அத்தனை மேடு பள்ளங்கள்.

தற்போது பாகிஸ்தான் பகுதியாக இருக்கும் பெஷாவரில் 1922 டிசம்பர் 11-ல் திலீப் குமார் பிறந்தார். அப்பா லாலா குலாம் சர்வார் கான், பணக்காரர். அம்மா ஆயிஷா பேகம். திலீப் குமாரின் இயற்பெயர் முகமது யூசுப் கான். நாசிக்கில் பள்ளிக் கல்வியை முடித்தார். அப்பாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வீட்டைவிட்டு வெளியேறி புனேயில் வந்து தங்கினார். கேன்டீன் நடத்தினார். பணம் சேர்த்து மும்பைக்கு வந்தார்.

அவரது திரை வாழ்க்கையை தொடங்கி வைத்தவர்கள் மூவர். பாம்பே டாக்கீஸை நடத்திக் கொண்டிருந்த நடிகை தேவிகா ராணி. அவர்தான் 1250 ரூபாய் மாதச் சம்பளத்துக்கு திலீப் குமாரை முதலில் வேலைக்கு அமர்த்தியவர். இன்னொருவர் நடிகர் அசோக் குமார். இயல்பாக நடிக்க வேண்டும் என்று திலீப் குமாரை உற்சாகப்படுத்தியவர். மூன்றாவது தயாரிப்பாளர் சஷாத்கர் முகர்ஷி. தேவிகா ராணியின் கம்பெனிக்காக ஸ்கிரிப்ட்கள் எழுதியவர் 1944-ல் Jwar Bhata படத்தின் மூலம் நடிகரானார்.

முதல் சில படங்களில் திலீப் குமார் யார் என்றே தெரியவில்லை. 1947-ல் வெளியான Jugnu ஹிட்டாகி, கவனிக்க வைத்தது. 1949-ல் ராஜ் கபூர், நர்கிஸுடன் நடித்த Andaz மாபெரும் வெற்றி பெற்று திலீப் குமாருக்கு சினிமாவில் அழுத்தமான இடத்தை பெற்றுத் தந்தது. ஐம்பதுகளில் அவர்தான் இந்தியின் டாப் ஹீரோ. தொடர்ச்சியான வெற்றிகள். அதிகமும் சோகம் இழையோடிய படங்கள் என்பதால் டிராஜடி கிங் என்று ரசிகர்கள் அவரை அழைக்க ஆரம்பித்தனர். எட்டுமுறை நடிப்புக்கான ஃபிலிம் பேர் விருது வாங்கினார். 1950-களிலேயே அவர் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார். இந்திய திரையுலகில் முதலில் லட்ச ரூபாய் சம்பளம் பெற்றது அவர்தான். 1960-ல் வெளியான முகெல் இ அசாம் அதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்தது. பத்து வருடங்கள் அந்த வசூல் சாதனையை எந்தப் படமும் நெருங்க முடியவில்லை. 1971-ல் வெளியான ஹாத்தி மேரே சாத்தி படம் அதனை முறியடித்தது. இதனை தயாரித்தவர் நம்மூர் தேவர் ஃபிலிம்ஸ் சான்டோ சின்னப்ப தேவர்.

1962-ல் டேவிட் லீன் லாரன்ஸ் ஆஃப் அரேபியா திரைப்படத்தை எடுத்த போது, அதில் வரும் ஷெரீப் அலி கதாபாத்திரத்துக்கு திலீப் குமாரை நடிக்கக் கேட்டார். அவர் மறுக்கவே அந்த வேடம் ஓமர் ஷரீஃ;புக்கு சென்றது. இன்று வரை அந்தப் படம் அவர் பெயரை சொல்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எழுபதுகளின் ஆரம்பத்தில் திலீப் குமாரின் புகழ் மங்கத் தொடங்கியது. படங்கள் சரிவர போகாமல் தோல்வியடைந்தன. ஆரம்பத்தில் நடிகை காம்னி கௌசலுடன் காதல் கொண்டிருந்தார் திலீப் குமார். பிறகு நடிகை மதுபாலா. இருவரும் இணைந்து முகெல் இ ஆசாம் படத்தில் நடித்த போது காதல் பற்றி கொண்டது. ஏழு வருடங்கள் இந்த உறவு நீடித்தது. மதுபாலாவின் தந்தைக்கு எதிரான வழக்கில் திலீப் குமார் எடுத்த நிலைப்பாடு அவர்கள் உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பிறகு நடிகை வைஜெயந்திமாலாவுடன் அவர் சில வருடங்கள் கிசகிசுக்கப்பட்டார். திலீப் குமாருடன் அதிக படங்களில் நாயகியாக நடித்தவர் இவர். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக தன்னுடன் நடித்த தன்னைவிட 22 வயது இளையவரான சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். 1972-ல் சாய்ரா பானு எட்டு மாத கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட ரத்தக்கொதிப்பால் குழந்தையை மருத்துவர்களால் உயிருடன் காப்பாற்ற முடியாமல் போனது. இதனை திலீப் குமார் தனது சுயசரிதையான 'திலீப் குமார் - தி சப்ஸ்டென்ஸ் அண்ட் தி ஷேடோ' வில் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் இல்லாதது இந்த தம்பதியரின் தீர்க்க முடியாத சோகம். பத்மபூஷன், தாதாசாகேப் பால்கே விருது உள்பட ஏராளமான விருதுகள் வாங்கியுள்ளார்.

திலீப் குமாரை கண்டதும், மண்டியிட்டு காதலிக்கு காதலன் பூ கொடுப்பது போல் பொக்கே தந்து மரியாதை செய்தார் கமல். "நான் சிவாஜி கணேசனை ஹீரோவாக வழிபட்டு வளர்ந்தேன். அவர் எனக்கு வழிகாட்டும் சூரியன் போல. பிறகு நான் என்னுடைய மொத்த பிரபஞ்சத்தை திலீப் குமாரில் கண்டடைந்தேன்" என்று கமல் கூறியுள்ளார்.

திலீப் குமாரின் பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக அவரது எவர்கிரீன் படமான Gunga Jumna. இந்திய சினிமாவின் ட்ரெண்ட் செட்டரான இந்தப் படம் தமிழில் இரு துருவம் என்ற பெயரில் ரீமேக்கானது. Deedar நீங்காத நினைவு என்ற பெயரிலும், Paigham சிவாஜி கணேசன் நடிப்பில் இரும்புத் திரை என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளன.

சுமார் நாற்பது வருடங்கள் திரைத்துறையில் தனது நடிப்பால் கோலோச்சிய ஆளுமை திலீப் குமார். அவரது இழப்பு கலையுலகுக்கு ஈடுசெய்ய முடியாதது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: