தமிழில் நடித்துக்கொண்டிருந்த தனுஷை முதல் முதலில் இந்தியில் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல். ராய். 2013ம் ஆண்டில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த ராஞ்சனா இந்திப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து எட்டு வருட இடைவெளிக்குப் பின் அத்ரங்கி ரே திரைப்படத்தில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் அக்ஷய் குமாரும் சாரா அலி கானும் உடன் நடித்திருந்தனர். சென்ற மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியான அத்தரங்கி ரே திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷுடன் இணையவுள்ளார் ஆனந்த் எல். ராய். முதல் இரு படங்களை காதல் திரைப்படமாக எடுத்த ஆனந்த் எல். ராய் இந்த மூன்றாவது திரைப்படத்தை ஆக்ஷன் கலந்த காதல் திரைப்படமாக எடுக்க உள்ளார். மேலும் இந்த படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும், உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் தெரியவில்லை. விரைவில் அவை குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மேலும் ஒரு இந்தி திரைப்படத்தில் நடிக்க தனுசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தயாராகியுள்ள மாறன் திரைப்படம் விரைவில் ஓடிடி வெளியீடாக வரவுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.
தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வந்த நானே வருவேன் திரைப்படத்தை வாத்தி படத்திற்கு பின் மீண்டும் தொடர இருக்கிறார் தனுஷ். இதையடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் பான் - இந்தியா திரைப்படமாக தயாராக உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.