‘ரவுடி பேபி’ படைத்த புதிய சாதனை - நன்றி தெரிவித்த தனுஷ்

ரவுடி பேபி

தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளைப் பெற்று ‘ரவுடி பேபி’ பாடல் சாதனை படைத்துள்ளது.

  • Share this:
மாரி படத்தின் இரண்டாவது பாகமாக வெளியான படம் மாரி 2. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் 2018-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது.

யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதில், ரவுடி பேபி பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷ் , சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைராலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது.

மேலும் இந்தப் பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளையும் 41 நாட்களில் 200 மில்லியன் பார்வைகளையும், 69 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளையும், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வைகளையும் 157 நாட்களில் 500 மில்லியன் பார்வைகளையும் பெற்றது. தற்போது 1 பில்லியன் பார்வைகளைக் கடந்து தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது ரவுடி பேபி பாடல்.இதுகுறித்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “என்ன ஒரு இனிய தற்செயலான நிகழ்வு... ‘ஒய் திஸ் கொல வெறி’ பாடலின் ஒன்பதாவது ஆண்டு விழா நாளில் ரவுடி பேபி 1 பில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. முதல் தென்னிந்திய பாடல் ஒன்று 1 பில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறோம். ஒட்டு மொத்த குழுவும் மனதிலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

தனுஷைத் தொடர்ந்து நடிகை சாய் பல்லவி, யுவன் சங்கர்ராஜா உள்ளிட்டோரும் ரவுடி பேபி பாடலின் புதிய சாதனைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: