மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
டிசம்பர் 9-ம் தேதி இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே கண்டா வரச்சொல்லுங்க, பண்டாரத்தி புராணம், திரௌபதையின் முத்தம் ஆகிய 3 பாடல்கள் வெளியிடப்பட்டது. 3 பாடல்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளன.
அடுத்ததாக கர்ணன் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் மார்ச் 23-ம் தேதி டீசர் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இந்த அறிவிப்பை இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பெறச் செய்து கொண்டாடி வருகின்றனர் தனுஷின் தீவிர ரசிகர்கள்.
பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஜனரஞ்சகமாக பேசி இருந்ததன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கர்ணன் திரைப்படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘பண்டாரத்தி புராணம்’ என்ற பாடலின் வரிகள் தமிழகத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாக மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த புல்லட் பிரபு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். மார்ச் 18-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திரைப்பட தணிக்கைத் துறை மண்டல அலுவலர், இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, திங்க் மியூசிக் இந்தியா யூடியூப் சேனலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.