Karnan: வசூலில் சாதனைப் படைக்கும் கர்ணன்: ஒளிந்திருக்கும் குறியீடுகள்!

Karnan: வசூலில் சாதனைப் படைக்கும் கர்ணன்: ஒளிந்திருக்கும் குறியீடுகள்!

கர்ணன்

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் வசூலில் அசத்தி வருகிறது. இப்படத்தின் வசூல் நிலவரம் மற்றும் இப்படத்தில் ஒளிந்திருக்கும் குறியீடுகள் குறித்து அலசும் ஒரு தொகுப்பை இங்கே குறிப்பிடுகிறோம்.

  • Share this:
    தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் வசூலில் அசத்தி வருகிறது. இப்படத்தின் வசூல் நிலவரம் மற்றும் இப்படத்தில் ஒளிந்திருக்கும் குறியீடுகள் குறித்து அலசும் ஒரு தொகுப்பை இங்கே குறிப்பிடுகிறோம்.

    தமிழில் எப்போதாவதுதான் ஒரு படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஒருசேர வெற்றி பெறும். அப்படி ஒரு அதிசயத்தை தான் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது தனுஷின் கர்ணன். கொரோனா அதிகரிப்பு, திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் வசூல் மழை பொழிந்து வருகிறது. முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்திருக்கும் இப்படம், தனுஷின் கரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

    ஒருபக்கம் வசூல் சாதனை என்றால் இன்னொருபக்கம் இப்படத்தில் மறைந்திருக்கும் குறியீடுகளை கண்டறிந்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். தூத்துக்குடி கொடியன்குளம் சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் கதாபாத்திரங்கள் வாழும் கிராமத்துக்கு பொடியன் குளம், என பெயர் வைத்ததில் தொடங்கி படம் நெடுக குறியீடுகளின் வழியே காட்சிகளின் வீரியத்தை ரசிகர்களிடம் கடத்தி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

    குறிப்பாக தெய்வங்களையும் தெய்வ வழிபாடுகளையும் மாரி செல்வராஜ் உணர்த்தி இருக்கும் விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சாதி ரீதியான ஒடுக்குமுறையை நினைவுபடுத்தும் விதமாக, படம் முழுக்க தலையில்லா புத்தர் சிலையை இடம்பெறச் செய்திருப்பதும் மறைந்தவர்கள் நாட்டார் தெய்வங்களாக, தங்களை வழி நடத்துவதை அழுத்தமாக சொல்லியிருப்பதும் என மாரி செல்வராஜ் வரலாற்றை நினைவுகூறும் பல சம்பவங்களை திரைக்கதை கட்டமைப்புக்குள் அழகாக புகுத்தியிருக்கிறார்.

    அதேபோல் தான் பேச நினைக்கும் அரசியலை நம்மை சுற்றி இருக்கும் உயிரினங்கள் வழியே பேசி விடுவது மாரிசெல்வராஜின் தனிசிறப்பு. அந்தவகையில் கழுதையின் முன்னங்கால்கள் கட்டப்பட்டிருப்பது அடிமைச்சங்கிலியின் குறியீடாகவும் அவை வெட்டி ஏறியப்படும், காட்சியில் உரிமைக்கான குரல் ஓங்கி ஒலிக்கும் விதமாகவும் காட்சிப்படுத்தி மிரட்டியிருக்கிறார்.

    ஊர் பெயர்களை போலவே கர்ணன், திரௌபதி, துரியோதனன் அபிமன்யு என கதாபாத்திரங்களின் பெயர்களையும் மகாபாரத பெயர்களைக் கொண்டு சித்தரித்திருக்கும் மாரி செல்வராஜ் இது உரிமைக்கான போர் என்பதை வலியுறுத்தும் விதமாக யானை, குதிரை, வாள் ஆகியவற்றை பயன்படுத்தி கூடுதலாக கவனம் ஈர்த்திருக்கிறார்.

    மொத்தத்தில் தமிழ் சினிமாவில் காட்சிகளின் வழியே உணர்வுகளை கடத்தும் இயக்குனர்களின் வரிசையில் மாரி செல்வராஜ் தன்னுடைய பெயரை தன் இரண்டாவது படத்திலேயே மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் என்பதை எவராலும் மறுக்க முடியாது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: