விஷ்ணு விஷால் நடித்திருக்கும் எஃப் ஐ ஆர் திரைப்படம் பிப்ரவரி 11 திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த விஷ்ணு விஷால் மற்றும் படக்குழுவினர் படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால் "எஃப் ஐ ஆர் படத்தை பலர் பார்த்து விட்டார்கள். படத்தை பார்த்த தனுஷ், ராக்ஷஸன் படத்தையும் தாண்டி இந்தப் படத்தில் ஒரு நடிகராக மிரட்டி விட்டீர்கள்" என்று பாராட்டியதாக பெருமையுடன் குறிப்பிட்டார்.
விஷ்ணு விஷால் வெளியிட்ட பல விஷயங்கள் விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக எட்டு படங்கள் டிராப் ஆனதாக விஷ்ணு விஷால் கூறினார்.
பெருங்கடனில் இருந்தவர் ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக்கை விற்றுதான் கடனிலிருந்து மீண்டிருக்கிறார். தனக்கு அனைத்து வகைகளிலும் உதவி செய்தது தனது தந்தை என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டவர், அவரது இடத்தில் நான் இருந்திருந்தால் இப்படி செய்திருப்பேனா என்று தெரியாது என்றார். மிகவும் நொந்து போயிருந்த நேரத்தில்தான் எப்ஐஆர் படத்தின் கதையை அப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் விஷ்ணு விஷாலிடம் கூறியிருக்கிறார். கதையை கேட்டவர் உடனே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளரால் உடனடியாக படத்தை தொடங்க முடியாத நிலையில், அதனை மறைக்காமல் மனு ஆனந்த் விஷ்ணு விஷாலிடம் சொல்ல, விஷ்ணு விஷாலே படத்தை தயாரிப்பது என்று முடிவு செய்து படத்தை தயாரித்திருக்கிறார்.
"என்னுடைய படங்களில் சில வெற்றி பெற்றிருக்கலாம், சிலர் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் அனைத்து படங்களுக்குப் பின்னாலும் என்னுடைய கடின உழைப்பும், வலியும் உண்டு. அதிக வலியை தந்த படம் காடன். தெலுங்கில் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்று நினைத்த அந்தப் படத்தில் நான் நடித்த 45 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. அது கடும் வலியை தந்தது" என விஷ்ணு விஷால்குறிப்பிட்டார்.
"லாக் டவுன் நேரத்தில் அதிக நேரம் எடுத்து மிகவும் கடுமையாக உழைத்து இந்த அழகான படத்தை உருவாக்கி இருக்கிறோம். கடந்த பல வருடங்களாக நான் அனுபவித்து வந்த துயரங்களுக்கு இந்தப் படம் பரிசாக அமைந்துள்ளது" என விஷ்ணு விஷால் குறிப்பிட்டார். விஷ்ணு விஷால் தயாரித்து நடித்திருக்கும் இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
Also read... நடிகர் விஷ்ணு விஷால் தந்தை மீது நடிகர் சூரி அளித்த பணமோசடி வழக்கு: சென்னை போலீசுக்கு மாற்றம்!
எஃப் ஐ ஆர் படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் இந்தப் படத்தின் கதை. இந்திய சினிமாவில் தீவிரவாதி என்றால் முஸ்லிம்கள் என்று காட்டப்படுவது வழக்கம். தமிழ் சினிமாவும் அதன்படியே முஸ்லிம்களை தொடர்ச்சியாக தீவிரவாதிகளாக காட்டி வந்தது. மாநாடு படத்தில் அதனை மாற்றியிருந்தார்கள். இந்தப் டத்திலும் ஒரு சராசரி முஸ்லிம் எப்படிப்பட்ட இடர்களுக்கு ஆளாகிறார் என்பதை உண்மைக்கு நெருக்கமாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் காட்டியிருக்கிறார்கள்.
தனது முஸ்லீம் நண்பனுக்கு ஏற்பட்ட அனுபவங்களை கேட்டபோது அதிர்ச்சி அடைந்ததாகவும் இவையெல்லாம் உண்மையில் நடக்கிறது. இதை நிச்சயம் சொல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கிய திரைப்படமாகவும் இது இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.