பயணி மியூசிக் வீடியோவை வெளியிட்டு, எனது தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, கடந்த 2004-ல் நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். பின்னர் 2012-ல் 3 என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார் ஐஸ்வர்யா. இதில் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.
இதைத் தொடர்ந்து கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கினார் ஐஸ்வர்யா. இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.
காத்திருப்பு முடிந்தது... குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
இதையடுத்து மீண்டும் இயக்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பத்திற்கு தமிழில் பயணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்.
கடவுள் ஆசிர்வதிக்கட்டும், லவ் யூ... மகள் ஐஸ்வர்யாவின் பயணி வீடியோவை வெளியிட்ட ரஜினிகாந்த்!
இந்நிலையில் இன்று பயணி மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டது. தமிழில் நடிகரும், ஐஸ்வர்யாவின் அப்பாவுமான ரஜினிகாந்த் அதனை வெளியிட்டார். தெலுங்கில் அல்லு அர்ஜுன், மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் இப்பாடலை வெளியிட்டனர். பின்னர் மகேஷ் பாபு, அனிருத், செளந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பயணி மியூசிக் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து ஐஸ்வர்யாவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதற்கிடையே ஆச்சர்யமான ஒரு விஷயம் நடந்திருக்கிறது. பயணி மியூசிக் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த தனுஷ், “பயணி மியூசிக் வீடியோவிற்காக என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். தனுஷின் இந்த ட்வீட்டுக்கு இதுவரை ஐஸ்வர்யாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் ஏதேனும் ரியாக்ட் செய்வாரா என்பதை அறிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.