கடந்த சில மாதங்களாக வாரிசா துணிவா என ரசிகர்கள் மனதில் முட்டி மோதிக்கொண்டிருந்த கேள்விக்கு இன்று விடை கிடைத்திருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் - விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன. எதிர்பார்த்தபடியே திரையரங்குகளில் இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். வாரிசு படத்தைப் பொறுத்தவரரை டிரெய்லரில் பார்த்த அதே கதை தான். தொழிலதிபரான சரத்தகுமாருக்கு 3 மகன்கள். ஸ்ரீகாந்த், ஷாம் என இரண்டு மகன்கள் அப்பாவின் வாரிசாக குடும்பத் தொழிலை கவனித்துக்கொள்ள இளைய மகன் தந்தையின் விருப்பத்துக்கு மாறாக செயல்படுகிறார். தந்தையுடனான மனக்கசப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் விஜய் 7 வருடங்களாக தனக்கான அடையாளத்தை பெற முயற்சிக்கிறார். தொழிலில் சிக்கல், குடும்பத்தில் குழப்பம் என ஏற்பட, மீண்டும் வீட்டுக்கு வரும் விஜய் பிரச்னைகளை சமாளித்து சரத்குமாரின் குட் லிஸ்ட்டில் இடம் பிடிக்கிறார் என்பது வாரிசு கதை.
மற்றொரு பக்கம் துணிவு படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் வங்கிகள் கிரெடிட் கார்டு மியூச்சுவல் ஃபண்ட் பெர்சனல் லோன் என்ற பெயரில் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று இப்படம் பேசுகிறது. மேலும் தனியார் வங்கிகளில் கட்டண கொள்ளை குறித்தும் விரிவாக அலசுகிறது. வங்கிக் கொள்ளையை திட்டமிடும் அஜித் அண்ட் கோ, கொள்ளையடித்தார்களா ? அவர் ஏன் வங்கியை கொள்ளையடிக்க அஜித் முடிவு செய்கிறார் என்ற கேள்விகளுக்கு துணிவு விடை சொல்லியிருக்கிறது. வாரிசு பொறுத்தவரை துப்பாக்கி படத்துக்கு பிறகு சமூக அரசியலை பேசி வந்த விஜய் மீண்டும் குடும்ப சென்டிமென்ட்டை கையில் எடுத்திருக்கிறார். விஜய் தனக்கே உரிய துள்ளலான நடிப்பில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக அதுவும் காமெடி நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி போல் ஒரு காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் கைதட்டல்கள் கிடைக்கின்றன. இது போன்ற 6 சீன்களில் ஸ்கோர் செய்து அசத்துகிறார். அது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும். விஜய்யிடம் என்ன எதிர்பார்ப்போமோ அதனை பக்கவாக திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் வம்சி. குடும்ப சென்டிமென்ட் காட்சிகளும் அதில் இடம்பெற்ற வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
படத்தில் நிறைய கதாப்பாத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் யாருக்கும் அழுத்தமான பின்புலம் இல்லாதது இந்தப் படத்தின் குறையாக இருக்கிறது. படத்தை அடுத்த காட்சி இதுதான் நடக்கப்போகிறது என எளிதில் யூகிக்க கூடியதாக இருக்கிறது. ரஞ்சிதமே பாடல் படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் படத்தில் அதனை சரியான இடத்தில் பயன்படுத்தப்படவில்லை. விஜய் - ராஷ்மிகாவுக்கான காட்சிகள் குறைவு. இப்படி குறைகள் ஒரு பக்கம் இருந்தாலும் குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவான இப்படம் இந்த பொங்கலுக்கு ஃபெஸ்டிவல் மோடுக்கு ஏற்ற படமாக வெளியாகியிருக்கிறது.
அதே போல துணிவு படம் வங்கியில் கொள்ளையடிக்கும் காட்சிகள், நடிகர் அஜித்தின் ஸ்டைலிஷான மேனரிஷம் என முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. அஜித் தன்னுடைய முதல் காட்சியிலேயே ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார். அவரின் உடல்மொழி, வசனங்கள், நக்கலான சிரிப்பு, ஸ்டைலான நடனம் என அனைத்தும் அட்டகாசமாகவும், அமர்களமாகவும் அமைந்திருக்கின்றன. இதுவரை பார்க்காத வேறொரு அஜித்தை ரசிகர்களின் கண் முன் நிறுத்தியுள்ளார் எச்.வினோத். துணிவு திரைப்படத்தில் சில நம்ப முடியாத விஷயங்கள் உள்ளன. லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. துப்பாக்கி சத்தம் கேட்கிறது. ஆனால் அவற்றை தவிர்க்க இயலாது. அதேபோல் க்ளைமேக் சண்டைக்காட்சி சற்று நீளமாக உள்ளது போன்ற உணர்வை கொடுக்கிறது. ஆங்காங்கே வரும் ட்விஸ்ட் படத்தை சுவாரசியப்படுத்துகிறது. அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறது.
மொத்தத்தில் இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கிறது. இரண்டு படங்களும் வழக்கம் போல தங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. பொங்கல் விடுமுறை ஒருவாரம் இருப்பதால் இரண்டு படங்களுக்குமே நல்ல வசூல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் வசூலில் பார்த்தால் இரண்டு படங்களுமே பொங்கல் வின்னர்தான். ஆனால் விமர்சன ரீதியாக பார்த்தால் வாரிசு எதிர்பார்த்த கதையாயகவும், அதே செண்டிமெண்ட் பார்முலாவாகவும் உள்ளது. அந்த வகையில் போரடிக்காத காட்சிகள், சோஷியம் மெசேஜ் என துணிவு ஒருபடி மேலே நிற்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal 2023, Thunivu, Varisu