நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காலியாக இருந்த மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானோம். என் வயதான பெற்றோரின் பைகளில் இருந்த சில்லறை காயின்களை வெளியே எடுக்க வைத்தனர். மேலும் நாங்கள் ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியிலேயே பேசினர். இதற்கு நாங்கள் எங்களது எதிர்ப்பை பதிவு செய்தபோது இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று கூறினர் என பதிவிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் நடிகர் சித்தார்த்தின் பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளியாகின. இதன் ஒரு பகுதியாக நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் புகார் அளித்துள்ளார். அதில், ''மொழி பிரச்னையைத் தூண்டும் விதமாக சித்தார்த் செயல்பட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போல் சித்தார்த்தையும் அவரின் குடும்பத்தினரையும் 2 ஆண்டுகளுக்கு விமானப்பயணத்தை தடைவிதிக்க வேண்டும் என்று பாஜக ஓபிசி பிரிவு செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி, மத்திய விமான போக்குவரத்துத்துறை இணைய அமைச்சர் வி.கே.சிங்கிடமும் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில் சித்தார்த்தின் குற்றச்சாட்டுக்கு மதுரை விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் விளக்கமளித்தார். அதில், நடிகர் சித்தார்த் தன்னுடைய குடும்பத்தினருடன் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார்.
அவர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் சோதனை கூடத்திற்கு வந்துபோது மாலை 4.15 மணி இருக்கும். சோதனை பகுதிக்கு வந்த அவரிடம் முகக் கவசத்தை விலக்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அவருடைய குடும்பத்தினரின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. இது வழக்கமான நடைமுறைதான்.
நடிகர் சித்தார்த் சோதிக்கப்பட்டபோது பாதுகாப்பு படை பெண் வீரர் தான் பணியில் இருந்தார். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். சித்தார்த்தின் குடும்பத்தினரின் உடைமைகளை அடிக்கடி சோதனை செய்ததால், அவரும் அவரது குடும்பத்தினரும் அந்த பெண்ணிடம் கோபத்தை வெளிப்படுத்தினர்.
இருப்பினும் அந்த பெண் எந்த தயக்கமுமின்றி அமைதியாக அவர்களுக்கு தமிழில் பதிலளித்தார். இந்தியில் பேசவில்லை. அவரது குடும்பத்தினர் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்படவில்லை. விமான நிலையத்திற்கு நடிகர் சித்தார்த் வந்ததிலிருந்து அவர் விமானத்தில் புறப்பட்டு செல்லும் வரையிலான அனைத்து காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Siddharth, Airport, Hindi