சரியாக 81 வருடங்களுக்கு முன், 1942, பிப்ரவரி 13-ல் கங்காவதார் வெளியானது. கங்கையின் அவதாரம் என்று இதற்குப் பெயர். தமிழ்ப் பெயர்தான். ஆனால், சமஸ்கிருத கதையை கொண்ட படம்.
அயோத்தியை ஆண்ட மன்னர் தேவர்களின் தலைவர் இந்திரனைப் போல் ஆவதற்காக அஸ்வமேத யாகம் நடத்துவார். அஸ்வமேத யாகத்தில், மன்னனின் குதிரை அவிழ்த்து விடப்படும். அது ஈரேழு உலகத்திற்கும் பயணிக்கும். மன்னனுடன் போர்புரிய விருப்பமில்லாதவர்கள் குதிரையை வணங்கி வழிவிட வேண்டும். அவர்கள் மன்னனால் தோற்கடிக்கப்பட்டவர்களாக கருதப்படுவார். மன்னனுக்கு அடிபணிய மறுப்பவர்கள் குதிரையை கட்டிப்போட வேண்டும். அவர்களுடன் போரிட்டு, குதிரையை மீட்டால் குதிரை தனது பயணத்தை தொடரும். இப்படி அனைத்து உலகங்களையும் வென்றால், அவனே மாமன்னன், இந்திரனுக்கு நிகரானவன்.
அயோத்தி மன்னனின் அஸ்வமேத யாகத்தை நாரதர் மூலம் அறியும் இந்திரன், குதிரையை கவர்ந்து வரச் சொல்வான். அதன்படி இந்திரனின் படைகள் குதிரையை கவர்ந்து பாதாள உலகத்தில் கொண்டு போய் கட்டி வைப்பார்கள். மன்னனின் மகன்கள் குதிரையைத் தேடி பாதாள உலகத்திற்கு செல்வர். இந்திரன் தனது வழக்கமான குயுக்தியுடன் குதிரையை தவம் செய்து கொண்டிருக்கும் முனிவரின் குடிலில் கட்டி வைத்திருப்பான். அதைப் பார்க்கும் மன்னனின் மகன்கள், குதிரையை முனிவர்தான் கவர்ந்து வந்திருக்க வேண்டும் என்று அவரது குடிலுக்கு தீ வைக்க, முனிவர் கோபமாகி அனைவரையும் கொன்றுவிடுவார்.
இறந்தவர்களின் களங்கத்தை துடைக்க வேண்டும் என்றால் அவர்களை கங்கை நீரில் குளிப்பாட்ட வேண்டும். நதி கங்கா இருப்பது ஹிமாலயத்தில். அவள் பூமிக்கு வர மாட்டேன், வந்தால் ஒட்டு மொத்த பூமியையும் அழித்துவிடுவேன் என்று மிரட்ட, அதற்குப் பின் வரும் அயோத்தி மன்னன் பகீரதா, கடும் தவம் இருந்து சிவனிடம் வரம் பெறுவான். சிவனும் கங்கைக்கு தக்க பாடம் கற்பிப்பதாக அருள் பாலிப்பார். அதன்படி கங்கையை தனது சடையில் சிறை வைத்து, அவள் கோபத்தைத் தணித்து, பூமியில் கங்கை நதியாக ஓட விடுவார். இந்தப் புராண கதையை மையமாகக் கொண்டு கங்காவதார் திரைப்படம் எடுக்கப்பட்டது. எல்லீஸ் ஆர்.டங்கனின் சதிலீலாவதியில் உதவி இயக்குனராக பணியாற்றிய சி.கே.சதாசிவம் என்ற சச்சி இந்தப் படத்தை இயக்கினார். இதற்கு முன்பே அவர் சந்திரகுப்தா சாணக்யா படத்தை இயக்கியிருந்தார். அதில் சாயா இளவரசியாக நடித்த என்.சி.வசந்தகோகிலத்துக்கு லண்டனில் இருந்து அழகுப் பொருட்களை இறக்குமதி செய்து, அவரை ஹாலிவுட் நடிகை போல் காட்டியிருந்தார். அதே வசந்தகோகிலம் கங்காவதார் படத்தில் கங்கையாக நடித்தார். மன்னர் பகீரதாவாக நாகர்கோவில் கே.மகாதேவனும், சிவனாக சி.வி.வி.பந்துலுவும் நடித்தனர். இந்தப் படத்தில் தேவலோக கன்னிகையாக சின்ன வேடம் ஒன்றில் வி.என்.ஜானகி நடித்தார்.
இசையும், பாடல்களும் சச்சியின் இயக்கமும் கங்காவதார் படத்தை வெற்றிப் படமாக்கின. இதன் பிறகு வசந்தகோகிலத்தின் பெயர் மேலும் புகழ்பெற்றது. பாகவதர் நடிப்பில் ஹரிதாஸ் தயாரான போது வசந்தகோகிலம் பிரதான வேடத்தில் நடித்தார். படம் பம்பர்ஹிட்டாகி மூன்று தீபாவளிகளை கடந்து ஓடியது.
1942, பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியான கங்காவதார், தற்போது 81 வருடங்களை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema