கட்டுக்குள் வந்த கொரோனா - ஓடிடி-யிலிருந்து திரையரங்குகளுக்கு படையெடுக்கும் படங்கள்!

கோப்புப் படம்

பல படங்கள் ஓடிடி பக்கமிருந்து தங்களது பார்வையை திரையரங்குகள் பக்கம் திருப்பியுள்ளன.

 • Share this:
  கொரோனா இரண்டாம் அலை எதிர்பார்த்ததை விட விரைவில் கட்டுக்குள் வந்ததால், திரையரங்குகளுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.

  கொரோனா முதல் அலையில் இந்தியாவில் தொற்றுப் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கையும், மரணமடைந்தவர் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. எனினும், ஊரடங்கு பல மாதங்கள் போடப்பட்டது. சகஜ நிலை திரும்ப ஏறக்குறைய ஒரு வருடம் பிடித்தது. இரண்டாம் அலை முதல் அலையை விட தீவி[ரமாகவும், தொற்று மற்றும் இறப்பு விகிதம் பல மடங்கு அதிகமாகவும் இருந்தது. அதனால், மேலும் ஒரு வருடம் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்றே பலரும் கருதினர். முன்னணி நடிகர்களின் படங்களும் திரையரங்குகளுக்குப் பதில் ஓடிடியை நோக்கி படையெடுத்தன.

  சூரரைப்போற்று படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, கார்த்திக் நரேனின் நரகாசூரன் என ஏராளமான திரைப்படங்கள் நேரடி ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகின. தனுஷின் ஜகமே தந்திரம் நேரடியாக ஓடிடியில் வெளியானது, திரையரங்குகளுக்கு மேலும் அச்சத்தை கொடுத்தது. இரண்டாம் அலை அதே தீவிரத்துடன் மேலும் சில வாரங்கள் நீடித்திருந்தால், முன்னணி நடிகர்களின் பெரும்பாலான படங்கள் ஓடிடிக்கு வந்திருக்கும்.

  ஆனால், எதிர்பார்த்ததுக்கு மாறாக இரண்டாம் அலை வேகமாக கட்டுக்குள் வந்தது. திரையரங்குகள் இன்னும் சில வாரங்களில் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், ஓடிடிக்கு போகலாமா என்று யோசித்த பல படங்கள் திரையரங்குகளுக்கு வருகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அக்ஷய் குமார் நடித்த பெல் பாட்டம் படம் ஓடிடியில் வெளியாவதாக இருந்தது. இரண்டாம் அலை கட்டுக்குள் வந்ததால் அதனை திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ஜுலை 27-ம் தேதி அந்தப் படம் திரைக்கு வருகிறது. அதேபோல் பிரபாஸின் ராதே ஷ்யாம் படத் தயாரிப்பாளர்களும் திரையரங்கு வெளியீட்டை உறுதி செய்துள்ளனர். மோகன்லாலின் ’மரக்கார் அரபிக் கடலிண்டெ சிம்ஹம்’ படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிடுவது என்பதில் உறுதியாக இருந்து, தற்போது ஆகஸ்ட் 12-ம் தேதி ஓணத்தை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். கேரள திரையரங்கு உரிமையாளர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி. மோகன்லால் படம் வெளியான மூன்று வாரங்களுக்கு வேறு எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என முடிவு செய்துள்ளனர். அதாவது ஆகஸ்ட் 12 முதல் மூன்று வாரங்களுக்கு மோகன்லாலின் மரக்கார் அரபிக் கடலிண்டெ சிம்ஹம் படம் கேரளாவின் 600 திரையரங்குகளில் திரையிடப்படும். வேறு படங்களுக்கு அனுமதியில்லை.

  படத்தை திரையரங்குகளில் மட்டுமே வெளியிடுவோம் என்பதில் உறுதியாக இருந்ததால் இந்த சலுகையா அல்லது, படம் வெளியான சில வாரங்களில் படத்தை அமேசான் பிரைமில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் இந்த முடிவா என்பது தெரியவில்லை. இதையடுத்து மோகன்லால் நடிப்பில் வெளியாக உள்ள ஆக்ஷன் படம் ஆறாட்டும் திரையரங்கில்தான் வெளியாகிறது.

  தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், சதீஷ் செல்வகுமார் இயக்கியிருக்கும் பேச்சிலர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டதால், திரையரங்கில் வெளியிடுவது என்ற முடிவை எடுத்துள்ளனர். இதேபோல் பல படங்கள் ஓடிடி பக்கமிருந்து தங்களது பார்வையை திரையரங்குகள் பக்கம் திருப்பியுள்ளன.

  திரையரங்குகள் இந்த சந்தர்ப்பத்தை நேர்வழியில் பயன்படுத்திக் கொண்டால் திரையரங்குகள் பிழைக்கும். டிக்கெட், தின்பண்டம், பார்க்கிங் என கிடைத்த கேப்பில் எல்லாம் கொள்ளையடிக்க முயன்றால், திரைப்படங்களும், ரசிகர்களும் ஓடிடி நோக்கி நகர்வதை தடுக்க முடியாது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: