கொரோனா இரண்டாவது அலை காலகட்டத்தில் உயிரிழந்த திரைப் பிரபலங்கள்

ஜனநாதன், விவேக், தாமிரா, கே.வி.ஆனந்த்

கொரோனா இரண்டாவது அலை காலத்தில் எஸ்.பி.ஜனநாதன், விவேக் உள்ளிட்ட நிறைய திரைக் கலைஞர்கள் தமிழகம் இழந்துள்ளது.

 • Share this:
  கொரோனா அனைவரையும் மீண்டும் வீட்டிற்குள் முடங்க செய்துள்ளதோடு அடுத்தடுத்த மரணச் செய்திகளால் மனதளவிலும் அனைவரையும் சோர்வடையச் செய்துள்ளது. இரண்டாவது கொரோனா அலை காலகட்டத்தில் ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கிய திரை நட்சத்திரங்களின் பட்டியலை பார்க்கலாம்.

  தமிழ் சினிமாவில் "இயற்கை" படத்தில் அடியெடுத்து வைத்து, பேராண்மை, பொதுவுடைமை என சமூக கருத்துகளை வலுவாக பேசியவர் இயக்குநர் எஸ்பி.ஜனநாதன் மார்ச் 14ம் தேதி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

  சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 59 வயதான நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறையினரை மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்தநாளான ஏப்ரல் 17ம் தேதி விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

  இரட்டைசுழி திரைப்படத்தில் அறிமுகமான எழுத்தாளர் தாமிரா கொரோனாவின் கோரப்பசிக்கு இரையானார். 52 வயதே ஆன தாமிரா ஏப்ரல் 27ம் தேதி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் ஏப்ரல் 30ம் தேதி மறைந்தார். பத்திரிகையாளராக பயணத்தைத் தொடங்கிய அவர், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். உடல்நலக்குறைவால் மருத்துவமனை சென்ற அவருக்கு பின்னர் கொரோனா உறுதியானதால் அவரின் உடலை கடைசியில் யாரும் பார்க்கக்கூட அனுமதிக்கப்படவில்லை என்பது கொரோனாவின் கோரமுகத்தின் உச்சம்.

  கஜினி, சுள்ளான் உள்ளிட்ட பிரபல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மே 10ம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார். சூர்யா, தனுஷ் ஆகியோரின் திரைவாழ்க்கையில் முக்கிய பங்காற்றியவர் சந்திரசேகர், இவரின் மறைவு தமிழ் சினிமாவை ஆட்டம் காண வைத்தது.

  தமிழ் சினிமாவில் 500 படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக மே 11ம் தேதி நெல்லையில் உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் அனைத்து பிரபலங்களுடனும் நடித்த சிவாவின் மறைவு, திரைத்துறையில் பலருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.

  இவைதவிர பழம்பெரும் நடிகரான ஜோக்கர் துளசி, கில்லி திரைப்படத்தில் விஜயுடன் நடித்த மாறன் உட்பட எண்ணற்ற திரை நட்சத்திரங்களின் அடுத்தடுத்த மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: