கொரோனா 2-ம் அலை நெருக்கமான பலரின் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது - இயக்குநர் நவீன்

இயக்குநர் நவீன்

கொரோனா இரண்டாம் அலை தனக்கு நெருக்காமானோர் பலரின் உயிர்களை காவு வாங்கியிருப்பதாக திரைப்பட இயக்குநர் நவீன் அச்சம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.

  கடந்த ஆண்டு இருந்த கொரோனா பரவலைக் காட்டிலும் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதோடு உயிரிழப்புகளையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதித்து பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்தது திரைத்துறையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

  கொரோனாவையும் தாண்டி இந்த ஆண்டு இயக்குநர் ஜன்நாதன், நடிகர் விவேக் ஆகியோர் திடீரென மரணமடைந்தனர். அதைத்தொடர்ந்து இயக்குநர் தாமிரா கொரோனா பாதித்து உயிரிழந்தது திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரையும் அச்சத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

  இந்நிலையில் திரைப்பட இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பதிவில், “இரண்டாம் அலை சற்று பயங்கரமாகவே இருக்கிறது. முதல் அலையில் எனக்கு தெரிந்த நண்பர்கள் பலருக்கு கொரோனா வந்தது போனது. ஆனால் இரண்டாம் அலை எனக்கு நெருக்கமானோர் பலரின் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. துயரோடு அதிகபடியான அச்சமும் கலந்தே இருக்கிறது. விழிப்புணர்வும் தைரியமும் தேவை. பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு

  தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக 15 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேவேளை, ஒரேநாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 15,830 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 502-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் சென்னையில் 27 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 87 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

  தமிழகத்தில் மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 13,728 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 14 ஆயிரத்து 43 பேர் என, இதுவரை மொத்தமாக 9 லட்சத்து 90 ஆயிரத்து 919 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 855 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sheik Hanifah
  First published: