Home /News /entertainment /

இயக்குநரை காக்க வைத்து மூட் சரியில்லை என திருப்பியனுப்பிய அஸ்வின்?

இயக்குநரை காக்க வைத்து மூட் சரியில்லை என திருப்பியனுப்பிய அஸ்வின்?

அஸ்வின்

அஸ்வின்

காலையிலேயே சென்று காத்திருந்த இயக்குநருக்கு அஸ்வின் வராதது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பின்னர் ஏன் வரவில்லை என்று விசாரிக்க, அன்று அவருக்கு மூட் சரியில்லை என்று பதில் கிடைத்திருக்கிறது.

    குக் வித் கோமாளி அஸ்வின் மீது புதிதாக வேறொரு புகார் எழுந்துள்ளது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர் அஸ்வின். இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பே, இவர் ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்துள்ளார். அதோடு ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறு ரோலிலும் நடித்துள்ளார். அதோடு குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

    இருப்பினும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அஸ்வினுக்கு பெரும் அங்கீகாரத்தைப் பெற்று தந்தது. இதையடுத்து பல ஆல்பம் பாடல்களில் தோன்றினார். அவைகள் யூ-ட்யூபில் மில்லியன் கணக்கான பார்வைகளையும் பெற்றுள்ளது.

    இந்நிலையில் தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்?’ படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார் அஸ்வின். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர், தான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என்றும் இதுவரை 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டர். இது இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

    இந்தப் பிரச்னை அடங்குவதற்குள் தற்போது மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் குக் வித் கோமாளி அஸ்வின். அதாவது சமீபத்தில் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குநர் ஒருவர் கதை சொல்லியிருக்கிறார். அந்த கதை பிடித்துவிட்டதால் தயாரிப்பு நிறுவனம் அஸ்வினை நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு முன்னணி நட்சத்திர ஓட்டலில் குறிப்பிட்ட நம்பரில் ரூம் புக் பண்ண சொன்னாராம் அஸ்வின்.

    இதையடுத்து அந்த தயாரிப்பு நிறுவனமும் ரூமை புக் செய்து, அங்கு இயக்குநரை அனுப்பி வைத்திருக்கிறது. அங்கு காலையிலேயே சென்று காத்திருந்த இயக்குநருக்கு அஸ்வின் வராதது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பின்னர் ஏன் வரவில்லை என்று விசாரிக்க, அன்று அவருக்கு மூட் சரியில்லை என்று பதில் கிடைத்திருக்கிறது.

    முன்னணி நடிகர்களே பணிவாக நடந்துக் கொள்ளும் தமிழ் சினிமாவில், ஹீரோவாக நடித்த முதல் படம் கூட வெளியாகாத நிலையில் அஸ்வினின் இந்த அணுகுமுறை அவரது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி