ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கர்ணன் வலிமையான படம் - மாரி செல்வராஜை பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்

கர்ணன் வலிமையான படம் - மாரி செல்வராஜை பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்

தனுஷ் உடன் மாரி செல்வராஜ்

தனுஷ் உடன் மாரி செல்வராஜ்

கர்ணன் ஒரு வலிமையான படம் என்று கூறி இயக்குநர் மாரி செல்வராஜூக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் 9-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து திரையரங்கில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் கர்ணன் படம் வசூல் மழை பொழிந்து வருகிறது. முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்திருக்கும் இப்படம், தனுஷின் கரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

ஒருபக்கம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, “கர்ணன் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை, நியாயத்தை, வலியை, எதிர்வினையைப் பேசும் ஒரு வலிமையான படம். நெஞ்சை உலுக்கும் காட்சிகளும்,குறியீடுகளும் நிறைய. அந்த உச்சந்தலை முத்தம் சாதி எங்கிருக்கிறது என்று கேட்பவர்களை எங்கில்லை? என்று பொட்டில் அடிக்கும் படம். பாராட்டுகள் மாரி செல்வராஜ்” என்று கூறியுள்ளார்.

கர்ணன் படம் முழுக்க இருக்கும் குறியீடுகள்

தூத்துக்குடி கொடியன்குளம் சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் கதாபாத்திரங்கள் வாழும் கிராமத்துக்கு பொடியன் குளம், என பெயர் வைத்ததில் தொடங்கி படம் நெடுக குறியீடுகளின் வழியே காட்சிகளின் வீரியத்தை ரசிகர்களிடம் கடத்தி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

குறிப்பாக தெய்வங்களையும் தெய்வ வழிபாடுகளையும் மாரி செல்வராஜ் உணர்த்தி இருக்கும் விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சாதி ரீதியான ஒடுக்குமுறையை நினைவுபடுத்தும் விதமாக, படம் முழுக்க தலையில்லா புத்தர் சிலையை இடம்பெறச் செய்திருப்பதும் மறைந்தவர்கள் நாட்டார் தெய்வங்களாக, தங்களை வழி நடத்துவதை அழுத்தமாக சொல்லியிருப்பதும் என மாரி செல்வராஜ் வரலாற்றை நினைவுகூறும் பல சம்பவங்களை திரைக்கதை கட்டமைப்புக்குள் அழகாக புகுத்தியிருக்கிறார்.

அதேபோல் தான் பேச நினைக்கும் அரசியலை நம்மை சுற்றி இருக்கும் உயிரினங்கள் வழியே பேசி விடுவது மாரிசெல்வராஜின் தனிசிறப்பு. அந்தவகையில் கழுதையின் முன்னங்கால்கள் கட்டப்பட்டிருப்பது அடிமைச்சங்கிலியின் குறியீடாகவும் அவை வெட்டி ஏறியப்படும், காட்சியில் உரிமைக்கான குரல் ஓங்கி ஒலிக்கும் விதமாகவும் காட்சிப்படுத்தி மிரட்டியிருக்கிறார்.

ஊர் பெயர்களை போலவே கர்ணன், திரௌபதி, துரியோதனன் அபிமன்யு என கதாபாத்திரங்களின் பெயர்களையும் மகாபாரத பெயர்களைக் கொண்டு சித்தரித்திருக்கும் மாரி செல்வராஜ் இது உரிமைக்கான போர் என்பதை வலியுறுத்தும் விதமாக யானை, குதிரை, வாள் ஆகியவற்றை பயன்படுத்தி கூடுதலாக கவனம் ஈர்த்திருக்கிறார்.

மொத்தத்தில் தமிழ் சினிமாவில் காட்சிகளின் வழியே உணர்வுகளை கடத்தும் இயக்குனர்களின் வரிசையில் மாரி செல்வராஜ் தன்னுடைய பெயரை தன் இரண்டாவது படத்திலேயே மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

Published by:Sheik Hanifah
First published:

Tags: Jothimani, Karnan, Kollywood, Mari selvaraj