முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகை சாய் பல்லவி மீது ஹைதராபாத்தில் புகார்

நடிகை சாய் பல்லவி மீது ஹைதராபாத்தில் புகார்

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய்பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஹைதராபாத்தில் உள்ள சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் புகார் அளித்துள்ளார்.

  • Last Updated :

காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலையும், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலும் வன்முறையே என சுட்டிக்காட்டி பேசிய சாய் பல்லவி மீது ஹைதராபாத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் ராணா டகுபதியின் ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ள ‘விரத பர்வம்’ படம் தொடர்பாக சாய் பல்லவி யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். படத்தில் நக்சல் தலைவனான ராணா டகுபதியை காதலிக்கும் பெண்ணாக சாய்பல்லவி நடித்துள்ளார்.

பேட்டியில், வன்முறை எழுச்சியை ஊக்குவிக்கும் ஒரு அரசியல் சித்தாந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா? என கேள்வி கேட்கப்பட்ட போது, கடந்த மார்ச் மாதம் வெளியான 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் குறித்த தனது கண்ணோட்டை வெளிப்படுத்தினர்.

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் அந்தக் காலக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டதை காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

அது வன்முறை என்றால், பசுவை அழைத்துச் செல்லும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷம் எழுப்பிச் சென்றதும் தவறு தான் எனக் குறிப்பிட்டார். இதற்கும் காஷ்மீரில் நடப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஒடுக்கப்படும் மக்களுக்கு துணையாக நாம் இருக்க வேண்டும் என்றும், காஷ்மீரி இந்து பண்டிட்கள் கொலை செய்யப்படுவதற்கு குரல் கொடுக்கும் மக்கள் இதற்கும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு பேசினார்.

அவரது இந்தக் கருத்துக்கு பரவலான எதிர்ப்பும். ஆதரவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சாய் பல்லவி தைரியமாக பேசி உள்ளார் என்றும், அவர் பேசியதுதான் சரிதான் என்றும் பலரும் ஆதரவுதெரிவித்து வருகிறனர்.

அதே சமயம் இந்துத்துவா ஆதரவாளர்கள், பாஜகவினர் உள்ளிட்ட பலர் சாய் பல்லவியின் கருத்துக்களை விமர்சித்து வருகின்றனர். சாய் பல்லவி பேசியது சரியில்லை என்றும், இரண்டையும் ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி வருகின்றனர்.

ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை அவர் அவமதித்துவிட்டார் என்றும், காஷ்மீர் பற்றி தெரியாமல் அவர் பேசி வருகிறார் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை சாய்பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஹைதராபாத்தில் உள்ள சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் புதன்கிழமை புகார் அளித்தார்.

Also read... தமிழகத்தில் 115 கோடியை வசூல் செய்த கே.ஜி.எஃப்-2

புகாரில், நடிகை சாய் பல்லவி காஷ்மீர் பயங்கரவாதிகளை, பசு காவலர்களுக்கு சமம் என்று ஒப்பிட்டு பேசியது தவறு எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நடிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது இதுவரை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றாலும் நடிகை சாய் பல்லவிக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress sai pallavi