முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினரும், நாடக, திரைக் கலைஞருமான 'பூ' ராமு மறைவுக்கு முதல்வர்
மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் பூ ராமு. கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் பூ ராமு. இதற்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் பூ ராமு நடித்திருந்தார். இருப்பினும் பூ படமே அவரை ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காணச் செய்தது.
அதன்பின் நீர்பறவை, தங்க மீன்கள், பரியேரும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார்.
குறிப்பாக பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி பிரின்சிபாலாக நடித்து ரசிகர்களை ராமு கவர்ந்தார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கும், கர்ணன் படத்தில் தனுஷுக்கும் பூ ராமு அப்பாவாக நடித்திருப்பார்.
தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வரும் நிலையில், இதய பிரச்னை காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவரது உயிர் பிரிந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பூ ராமுவின் மறைவு தமிழ் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு திரைக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'பூ' ராமு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தனது திரையுலக நடிப்பால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் கொண்ட நடிகர் தோழர் பூ ராமு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
வீதி நாடகக் கலைஞராக இடதுசாரி கருத்துகளை வெகுமக்களிடம் கொண்டு சென்ற அவரது பணியை முற்போக்காளர்கள் என்றும்
நினைவுகூர்வார்கள். பூ திரைப்படத்தின் வழியாகத் தனது நடிப்பாற்றலால் திரையுலகில் தடம் பதித்த அவர், நெடுநல்வாடை, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் வழியாகத் தனக்கென மக்களின் மனங்களில் தனியிடம் பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.
தனது பயணத்தை நிறைவுசெய்துகொண்ட தோழர் பூ ராமு அவர்களது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக கலைஞர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, உயிரிழந்த பூ ராமுவின் உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.