Home /News /entertainment /

எஸ்.பி.பியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருக்கம்

எஸ்.பி.பியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருக்கம்

எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.பி

எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.பி

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.  அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்தநிலையில், நேற்றுமுதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

    நேற்று, மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் அவரது உடல்நிலையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

    எஸ்.பி.பி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், ‘தமிழ்நாட்டு மக்களை தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும் எஸ்.பி.பி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

    இந்திய இசை உலகத்துக்கு 20-ம் நூற்றாண்டில், இறைவன் அளித்த இனிய கொடையாக வந்து உதித்தவர். ’ஆயிரம் நிலவே வா’ என்ற புகழ்மிக்க பாடலை எஸ்.பி.பிதான் பாட வேண்டும் என்று காத்து இருந்த வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம் பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியன். அன்னாரது குரலில் நேற்றும், இன்றும், நாளையும் ஒலிக்கும் ‘தங்கத் தாரகையே வருக.. வருக.. தமிழ் மண்ணின் தேவதையே வருக.. வருக; என்ற ஜெயலலிதாவின் புகழ் பாடும் பாடல் கழகத்தில் வரலாற்றில் என்று இணைந்திருக்கும்.


    எஸ்.பி.பியின் குரல் இனிமைக்கும் நிகர் அவரே. மிக அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்து புகழின் உச்சிக்கே சென்றவர். அவர், பாடகர், நடிகர், பின்னணி குரல் இசையமைப்பாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர். கலைமாமணி விருது, தேசிய விருது, பல மாநில விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். தனது ஈடு இணையற்ற குரல் வல்லமையால் தமிழ் திரைப்பட உலகுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியனின் மறைவு திரைப்படத்துறைக்கும், கலை உலகிற்கும் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: S.P.Balasubramaniyam

    அடுத்த செய்தி