ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கிளாஸிக் தமிழ் சினிமா… இந்திப்பட கிளைமாக்ஸை வாங்கி தமிழ்ப் படத்தில் பயன்படுத்திய ஏ.வி.எம். நிறுவனம்…

கிளாஸிக் தமிழ் சினிமா… இந்திப்பட கிளைமாக்ஸை வாங்கி தமிழ்ப் படத்தில் பயன்படுத்திய ஏ.வி.எம். நிறுவனம்…

தமிழ் படத்தில் பயன்படுத்தப்பட்ட இந்திப் பட க்ளைமாக்ஸ் காட்சிகள்

தமிழ் படத்தில் பயன்படுத்தப்பட்ட இந்திப் பட க்ளைமாக்ஸ் காட்சிகள்

ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் கிளைமாக்ஸ், இந்திப் படத்தின் கிளைமாக்ஸை வாங்கி மேட்ச் செய்தது என்றால் நம்ப முடிகிறதா? நம்ப முடியாத பல விஷயங்களை அன்றைய தொழில்நுட்பக் கலைஞர்கள் செய்திருக்கிறார்கள்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், கதாசிரியர்களும் இணைந்து அந்தக் காலத்தில் என்னென்ன ஜெகஜ்ஜால வேலைகள் செய்திருக்கிறார்கள், விதிகளைத் தாண்டி எவ்வளவு பெரிய வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள் என்பதை இளையதலைமுறை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அறிய வேண்டியது அவசியம். சாம்பிளுக்கு ஒன்று.

  1979 இல் தர்மேந்திரா, ஹேமமாலினி நடிப்பில் தில் கா ஹீரா என்ற இந்திப் படம் வெளியானது. சண்டைக் காட்சிகள், ஹேமமாலினியின் கவர்ச்சி என பல விஷயங்கள் இருந்தும் படம் சுமாராகத்தான் போனது. 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தயாரிப்பாளர்களின் கையை கடித்தது. அந்த சோகக் கதையை தயாரிப்பாளர் லக்ஷ்மணன் ஏவிஎம் சரவணனிடம் கூறியுள்ளார். இந்தப் படத்தின் இன்னொரு தயாரிப்பாளர் இதயம் பேசுகிறது மணியன்.

  உள்ளத்தை அள்ளித்தா படத்தில், வேன் எல்லாம் வச்சு கடத்தியிருக்காங்கப்பா என்று கவுண்டமணி சொல்வது போல், கிளைமாக்ஸை ரொம்ப செலவு பண்ணி ஹெலிகாப்டர் எல்லாம் வச்சு எடுத்தோம். ஆனால், நஷ்டமாகிப் போச்சு என்று கூறியிருக்கிறார் லக்ஷமணன்.

  இதைக் கேட்ட சரவணன் கிளைமாக்ஸை பார்க்க முடியுமா என்று கேட்க, அவருக்காக கிளைமாக்ஸ் காட்சியை போட்டு காட்டியிருக்கிறார்கள். சரவணனுக்கு கிளைமாக்ஸ் பிடித்துப் போகிறது. அப்போது அவர் கமல் நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் தூங்காதே தம்பி தூங்காதே படத்தை தயாரித்திருந்தார். அந்தப் படத்தில் இந்திப் பட கிளைமாக்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முப்பதாயிரம் ரூபாய்க்கு கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் வாங்கினார்.

  கிளைமாக்ஸ் காட்சியை எஸ்.பி.முத்துராமன், தூங்காதே தம்பி தூங்காதேயின் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம் பார்த்தனர். எப்படி இதனை தங்கள் படத்தில் பயன்படுத்துவது என்று அவர்களுக்கு குழப்பம். உடனே தங்களின் ஆஸ்தான திரைக்கதையாசிரியர் விசுவை அழைத்து கிளைமாக்ஸை திரையிட்டுக் காட்டினார் சரவணன். ஏவிஎம் தெலுங்கு, இந்தியிலிருந்து தமிழில் ரீமேக் செய்யும் படங்களுக்கு விசுதான் தொடர்ந்து திரைக்கதை எழுதிக் கொண்டிருந்தார்.

  கிளைமாக்ஸைப் பார்த்தவர், புதிதாக ஒரு கேரக்டரை உருவாக்கி இதே காட்சியை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஐடியா கொடுக்க, செந்தாமரை கதாபாத்திரம் புதிதாக சேர்க்கப்பட்டு, மும்பையில் கமல், செந்தாமரையை வைத்து இந்திப் படத்தின் கிளைமாக்ஸுக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கி மேட்ச் செய்தனர்.

  தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் வரும் ஹெலிகாப்டர் காட்சி இந்திப் படத்தில் இடம்பெற்றது. குளோசப்பில் கமல் ஹெலிகாப்டரில் அமர்ந்திருப்பது போல் எடிட்டர் விட்டல் வெட்டி ஒட்டி, கமல் ஹெலிகாப்டரில் அமர்ந்திருப்பது போன்ற ஃபீலை கொண்டு வந்தார்.

  அதேபோல் ஹெலிகாப்டர் காரில் மோதுவது இந்திப் படத்திற்காக எடுத்தது. செந்தாமரை காரில் செல்லும் காட்சியை வெட்டி ஒட்டி, ஹெலிகாப்டர் செந்தாமரை செல்லும் காரை இடிப்பது போல் எடுத்தனர். அப்படி ஹெலிகாப்டரே இல்லாமல் எடுக்கப்பட்ட காட்சிகளை, இந்திப் படத்தின் ஹெலிகாப்டர் சேஸிங் காட்சிகளுடன் சேர்த்து திரையரங்கில் ரசிகர்களின் அட்ரினலை எகிற வைத்தனர். இதன் மூலம், நஷ்டப்பட்ட இந்திப்பட தயாரிப்பாளருக்கு முப்பதாயிரம் ரூபாய் கிடைத்தது, முப்பதாயிரம் ரூபாய் செலவில் பிரமாண்டமான ஹெலிகாப்டர் சேஸிங் காட்சி ஏவிஎம்முக்கு கிடைத்தது. இரண்டு பேருக்குமே லாபம்.

  இந்த கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்ததற்கான மொத்த கிரெடிட்டும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனையும், எடிட்டர் விட்டலையுமே சாரும் என ஏவிஎம் சரவணனின் பேத்தி அருணா குகன் இணையத்தில் கூறியுள்ளார். அது முற்றிலும் உண்மை.

  தூங்காதே தம்பி தூங்காதே உண்மையில் எம்ஜிஆரின் டைட்டில். நாடோடி மன்னனுக்குப் பிறகு இந்தப் பெயரில் ஒரு படத்தை ஆரம்பித்து, பல காரணங்களால் அது தடைபட்டது. அந்தப் பெயரை ஏவிஎம் தங்கள் படத்துக்கு பயன்படுத்திக் கொண்டது.

  ஏவிஎம் தயாரித்த படங்களில் அதிகம் வசூலித்த படங்களில் தூங்காதே தம்பி தூங்காதேயும் ஒன்று. ஏவிஎம் சரவணனின் தந்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் கமல், ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க விரும்ப, ரஜினியுடன் இனி இணைந்து படம் பண்ண வேண்டாம் என்று கமல் முடிவெடுத்ததால் இருவரும் ஏவிஎம்முக்கு தனித்தனியே கால்ஷீட் அளித்தனர்.

  அப்படி 1980 இல் முரட்டுக்காளையும், 1982 இல் சகலகலாவல்லவன் படமும் ஏவிஎம் தயாரிப்பில் வெளியாகின. இரண்டையும் எஸ்.பிமுத்துராமன் இயக்கினார். இதில் சகலகலாவல்லவன் இன்டஸ்ட்ரி ஹிட். அதுவரை வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வசூலையும் முறியடித்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த வருடமே (1983) தூங்காதே தம்பி தூங்காதே படத்தை எடுத்து வெளியிட்டனர். 250 நாள்களுக்கு மேல் ஓடிய படம் பல இடங்களில் வசூல் சாதனை படைத்தது.

  ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் கிளைமாக்ஸ், இந்திப் படத்தின் கிளைமாக்ஸை வாங்கி மேட்ச் செய்தது என்றால் நம்ப முடிகிறதா? நம்ப முடியாத பல விஷயங்களை அன்றைய தொழில்நுட்பக் கலைஞர்கள் செய்திருக்கிறார்கள்.

  1983, நவம்பர் 4 ஆம் தேதி இதே நாளில் தீபாவளியை முன்னிட்டு வெளியான தூங்காதே தம்பி தூங்காதே இன்று 39 வருடங்களை நிறைவு செய்கிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood