தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தீபாவளியைவிட முக்கியமான பண்டிகை தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். அனைத்துத் தமிழர்களும் சாதி, மத உணர்வுகள் தவிர்த்து, ஒன்றாக கொண்டாடும் பெருநாள்.
பொங்கல் பண்டிகையில் தங்களின் படம் திரைக்கு வருவதை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் ஒரு கௌரவமாகப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிக விடுமுறைகள் கொண்ட பண்டிகை என்பதால், அதிக வசூல் கிடைக்கும் என்பது இன்னொரு காரணம்.
அன்று முதல் இன்றுவரை பொங்கல் பண்டிகைக்கு அதிக திரைப்படங்கள் தந்த நாயகன் யார் என்று பட்டியல் எடுத்துப் பார்த்தால், அனைவரையும் விஞ்சி நடிகர் திலகம் சிவாஜி கணேசனே முதலிடத்தில் உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவரது நடிப்பில் மொத்தம் 22 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இத்தனை அதிக திரைப்படங்களை பொங்கல் வெளியீடாகக் கொண்ட மற்றொரு நாயகன் தமிழ் சினிமாவில் இல்லை.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி நடிகர் திலகத்தின் இரு படங்கள் வெளியாகியுள்ளன. ஒன்று, 1958 வெளியான தங்கப் பதுமை, இன்னொன்று 1986 வெளியான சாதனை. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11 இரு படங்கள் வெளியாகியுள்ளன. ஒன்று, 1975 வெளியான மனிதனும் தெய்வமாகலாம், 1991 வெளியான ஞான பறவை. ஜனவரி 12 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு காவேரி திரைப்படம் 1955 வெளியானது.
ஜனவரி 14 ஆம் தேதி மட்டும் நடிகர் திலகம் நடிப்பில் 13 படங்கள் வெளியாகியுள்ளன.
14-01-1953 - பரதேசி
14-01-1956 - நான் பெற்ற செல்வம்
14-01-1956 - நல்ல வீடு
14-01-1960 - இரும்புத்திரை
14-01-1962 - பார்த்தால் பசி தீரும்
14-01-1964 - கர்ணன்
14-01-1965 - பழநி
14-01-1967 - கந்தன் கருணை
14-01-1970 - எங்க மாமா
14-01-1971 - இரு துருவம்
14-01-1977 - அவன் ஒரு சரித்திரம்
14-01-1981 - மோகனப் புன்னகை
14-01-1984 - திருப்பம்
14-01-1987 - ராஜ மரியாதை
இந்த 13 படங்கள் தவிர, நாகேஸ்வரராவுடன் நடிகர் திலகம் நடித்த பெசவாடா பெப்புலி தெலுங்குப் படம் 1983, ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வந்தது. தெலுங்கு பேசும் மக்களின் சங்கராந்தி திருவிழாவை முன்னிட்டு இந்தப் படத்தை வெளியிட்டனர்.
அதே வருடம் ஜனவரி 14 திரைக்கு வந்த உறவுகள் மாறலாம் திரைப்படத்தில் நடிகர் திலகம் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இவை தவிர, 1999 சிவாஜி நடித்த மன்னவரு சின்னவரு திரைப்படம் பொங்கல் அன்று ஜனவரி 15 ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்தப் படங்களில் 80 சதவீதப் படங்கள் 100 நாள்கள் ஓடியவை. அவரளவுக்கு பொங்கல் படங்கள் தந்ததும், வெற்றி பெற்றதும் வேறு நடிகர் யாரும் இல்லை. இந்த சாதனையை இன்னொரு நடிகரால் நெருங்க முடியுமா என்பதும் சந்தேகமே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Sivaji ganesan, Classic Tamil Cinema, Pongal 2023