அவரின் உடலைக் கூட நேரில் தரிசிக்க முடியாத சோகத்தில் இருக்கிறேன் - பி.கண்ணன் மறைவு குறித்து பாரதிராஜா உருக்கம்

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணனுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் உடலைக் கூட நேரில் தரிசிக்க முடியாத சோகத்தில் இருக்கிறேன் - பி.கண்ணன் மறைவு குறித்து பாரதிராஜா உருக்கம்
இயக்குநர் பாரதிராஜா
  • Share this:
இயக்குநர் பாரதிராஜாவின் நிழல்கள் தொடங்கி பொம்மலாட்டம் வரை பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன்.

சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பி.கண்ணனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மதியம் உயிரிழந்தார்.

அதிகமாக பாரதிராஜாவின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததால் திரைத்துறையினர் பாரதிராஜாவின் கண்கள் என்றே இவரை அழைத்து வந்தனர். அவரது மறைவு செய்தியை அறிந்த பாரதிராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “பல நேரங்களில் பல்வேறு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். மகிழ்ச்சியாகவும் சில விஷயங்களைக் கூறி மகிழ்ந்திருக்கிறேன். சில நேரங்களில் இக்கட்டான சூழ்நிலையில் என்னுடைய வருத்தங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


ஒளிப்பதிவாளர் பி.கண்ணன்


என் வாழ்வில் என் துணைவியாரைக் காட்டிலும் நான் நேசித்து வளர்ந்த ஒரு மிகப்பெரிய மகா ஒளிப்பதிவுக் கலைஞன் பி.கண்ணன். உங்களுக்குத் தெரியும். நான் படப்பிடிப்புக்கு கேமராவை எடுத்துச் செல்வதில்லை என் கண்ணனின் இரண்டு கண்களைத் தான் எடுத்துச் செல்கிறேன். அவருக்குத் தான் ஆகாயத்தின் மறுபக்கத்தையும் பார்க்கத் தெரியும் என்று சொல்லியிருக்கிறேன். 40 ஆண்டுகாலம் அவருடன் இணைந்து பணியாற்றி இன்றளவும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை அவரின் மறைவை.

இந்தக் கொரோனாவின் இடுக்குப் பிடியிலே சிக்கி அவரின் உடலை நேரில் கூட தரிசிக்க முடியாத சோகத்தில் இருக்கிறேன். ஒரு அற்புதமான கலைஞனை நான் மட்டும் இழக்கவில்லை. இந்தக் கலையுலகம் இழந்துவிட்டது. என் உயிர் தோழன் ஒரு குப்பத்து பிண்ணனியை எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும், நாடோடித் தென்றல் ஒரு பீரியட் படம் அதை எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும், காதல் ஓவியம் அது ஒரு காவியம் அதற்கு எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என இந்த வித்தைகளை எல்லாம் தெளிவாகத் தெரிந்த ஒரு மிகப் பெரிய கலைஞன்.என்னோடு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் இன்று என்னுடன் இல்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
எனக்கு கிடைத்த புகழ், இந்த மண், மண் வாசனை, இந்த மக்களுடைய கலாசாரம் இதுதான் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தியது. அதில் எனக்கு ஏற்பட்ட புகழ், பெருமையின் பெரும்பங்கு என் கண்ணனுக்குத் தான் சேர வேண்டும்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று ஒப்புக்காக என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று நினைக்கவில்லை. இந்தக் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து அவருடைய உடலை பார்க்க முடியாத சூழலில் இந்தத் துக்கத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இந்தக் கலாச்சாரத்தை, பண்பாட்டை ஒளிப்பதிவின் மூலமாக உலகுக்குச் சொன்ன அந்த அற்புதமான கலைஞனுக்கு, பாரம்பரியமிக்க பீம் சிங்கின் மகன் கண்ணனுக்கு அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டுகிறேன்" இவ்வாறு பாரதிராஜா அந்த வீடியோவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: உங்களுக்காக உயிரை விடுவேன்... பதறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷின் பதில்First published: June 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading