Cinematograph Act: ஒளிப்பதிவு (திருத்த) சட்டம் என்ன சொல்கிறது? படைப்பு சுதந்திரத்தை பறிக்கிறதா?

ஒளிப்பதிவு திருத்த சட்டம்

திரைப்பட தணிக்கை மறுசீராய்வுத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்ட சில வாரங்களில் இந்த சட்டவரைவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

  • Share this:
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 படைப்பாளிகளின் சுதந்திரத்தை நேரடியாக பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. உலகின் எந்த ஜனநாயக நாட்டிலும் இதுபோன்றதொரு சட்டம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த சட்டம் குறித்து பார்க்கும் முன், மத்திய அரசு இந்த சட்டத்திற்கு முன்னோட்டமாக செய்த நடவடிக்கையை விளக்க வேண்டும்.

இந்தியாவில் தயாராகும் எந்தத் திரைப்படமும் மத்திய திரைப்பட தணிக்கைக்குழுவின் சான்று பெற்றே வெளியாக முடியும். படத்தில் இடம்பெற்றிருக்கும் பாலியல், வன்முறைக் காட்சிகளைப் பொறுத்து படங்களுக்கு யு, யு/ஏ, ஏ சான்றுகள் அளிக்கப்படும். யு படத்தை அனைவரும் பார்க்கலாம். யு/ஏ படத்தை 18 வயதுக்குட்பட்டவர்கள் பெரியவர்களின் துணையுடன் பார்க்கலாம். ஏ சான்றிதழ் பெற்ற படத்தை பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவர். இந்தியாவில் யு மற்றும் யு/ஏ இரண்டும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதாவது அனைத்து வயதினரும் இந்த சான்று பெற்ற படங்களைப் பார்க்கிறார்கள்.

தணிக்கைக்குழு ஒரு படம் தகுதியற்றது என்று கருதினால், அதற்கு சான்றுதர மறுக்கலாம். அரசியல், மத, சாதி போன்ற சென்ஸிடிவான காரணங்களை குறிப்பிட்டு இப்படி சான்றுதர மறுக்கப்பட்ட திரைப்படங்கள் ஏராளம் இருக்கின்றன. தனிப்பட்ட விரோதத்தின் பொருட்டும் பல படங்களுக்கு சான்று மறுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் திரைப்படங்களை நீங்கள் திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்கு அனுப்பினால் அவர்கள் படத்தைப் பார்த்து சான்றிதழ் தருவார்கள். தணிக்கைக்குழுவின் முடிவு சரி என்று கருதினால் தீர்ப்பாயமும் சான்றிதழ் மறுக்கும். சம்பந்தப்பட்டவர்கள் பிறகு நீதிமன்றத்தைதான் நாட வேண்டும். ஆனால், தணிக்கைக்குழுவால் சான்றிதழ் மறுக்கப்பட்ட 90% திரைப்படங்கள் தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டு சான்றிதழ் பெற்றிருக்கின்றன. தணிக்கைக்குழு அனுமதி மறுக்கும் காட்சிகளுக்காக தீர்ப்பாயம் சென்று அனுமதி வாங்கிய படங்களும் இருக்கின்றன. சுருக்கமாக படைப்பாளிகளுக்கு தீர்ப்பாயம் ஒரு எமர்ஜென்ஸி ஆக்சிஜன் சிலிண்டராக இருந்தது. அந்த தீர்ப்பாயத்தை இப்போதைய அரசு கலைத்தது. இதனால், தணிக்கைகுழுவால் சான்றிதழ் மறுக்கப்பட்ட படங்கள் நீதிமன்றத்தை நாடுவது ஒன்றே வழி. அவர்களுக்கிருந்த இன்னொரு வாசல் முழுமையாக அடைக்கப்பட்டுவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி, நீதிமன்றம் செல்லலாம் என்றால், இங்குதான் இந்த அரசின் புதிய சட்ட வரைவு வருகிறது. ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ன் படி ஏற்கனவே இருக்கும் ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். அதன்படி ஒரு படம் தணிக்கைக்குழுவில் சான்றிதழ் பெற்றாலும், அரசால் அந்த சான்றிதழை மாற்றியமைக்க முடியும். அதாவது யு சான்றிதழ் பெற்ற படத்துக்கு ஏ சான்றிதழ் தர முடியும். தேவைப்பட்டால் அந்த சான்றிதழை ரத்து செய்யவும் முடியும். அதாவது சான்றிதழை ரத்து செய்து படம் வெளியாகாமல் முடக்க முடியும். இந்த சட்ட வரைவின் மூலம் தணிக்கைக்குழு, நீதிமன்றம் இரண்டையும் தாண்டிய அதிகாரத்தை ஒன்றிய அரசு பெறுகிறது.

திரைப்படத் தணிக்கை மறுசீராய்வுத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்ட சில வாரங்களில் இந்த சட்டவரைவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அரசுக்கு எதிராகவோ, அதன் தவறுகளை சுட்டிக் காட்டியோ இல்லை விமர்சித்தோ ஒருவர் படம் எடுத்தால் அப்படம் வெளியாகாமல் தடுக்கும் எதேச்சதிகாரத்தை இதன் மூலம் அரசு பெறுகிறது. இது படைப்பாளியின் சுதந்திரத்தை நேரடியாக பறிக்கும் செயல். தணிக்கைச் சான்றிதழ் பெற்ற ஹேராம், விஸ்வரூபம், பத்மாவதி போன்ற படங்களே சில அமைப்புகளின் எதிர்ப்பின் காரணமாக திரையிட முடியாத சூழல் நிலவுகிற நாட்டில், ஓர் அமைப்போ இல்லை ஒரு கும்பலோ ஒரு படத்திற்கு எதிராக கருத்துரைத்தால் அதனை அடிப்படையாக வைத்தே அரசு அப்படத்தை நேரடியாக தடை செய்ய முடியும். யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையிலும் அரசுக்கு ஒவ்வாமையான படைப்புகளை வெளிவராமல் செய்ய முடியும்.

மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப மனிதர்களின் சுதந்திரவெளி விரிவடையும். இந்தியாவில் அது நேர்மாறாக மாறிக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயத்தை இதுபோன்ற சட்டங்கள் ஏற்படுத்துகின்றன.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: