• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சினிமாவும் அரசியலும் : தமிழக அரசியலில் ஆழத் தடம் பதிக்கும் நடிகர்கள்

சினிமாவும் அரசியலும் : தமிழக அரசியலில் ஆழத் தடம் பதிக்கும் நடிகர்கள்

Youtube Video

சினிமாவும் அரசியலும் என்ற தலைப்பில் தமிழக அரசியலில் ஆழத் தடம் பதிக்கும் நடிகர்களை பற்றி இந்த வீடியோ தொகுப்பில் பார்க்க்கலாம்.

  • Share this:
    தமிழக அரசியலில் நீண்ட காலமாக திரைத்துறையினரின் ஆதிக்கம் இருக்கும் நிலையில், தற்போதைய தேர்தலில் மிகவும் அதிகளவில் திரைத்துறையினர் களமிறங்கியுள்ளனர்.

    காமராஜருக்கு பிறகு பேரறிஞர் அண்ணா தொடங்கி கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பலரும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களே. அந்த வரிசையில் இணையத் துடிக்கும் பலரும் வரும் தேர்தலில் களம் கண்டிருக்கிறார்கள்... பிரபல நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் கட்சியைத் தொடங்கி, கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறார். 2018ஆம் ஆண்டில் திடீரென கட்சியை தொடங்கிய கமல், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மூன்றரை சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஆச்சரியமூட்டினார். அப்போது கோவையில் அதிக வாக்குகளைப் பெற்றதால், தற்போது சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் ...

    மக்கள் நீதி மையத்தில் ஆரம்பம் முதலே பணியாற்றி வரும் நடிகை ஸ்ரீபிரியா, இந்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் களமாடுகிறார். பிறந்தது முதலே மயிலாப்பூரில் இருந்து வருவதால், அந்த தொகுதியை தேர்வு செய்துள்ளார் .

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக கமல்ஹாசனுடன் இணக்கமான கவிஞர் சினேகன், மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாள் முதலே இளைஞரணி தலைவராக உள்ளார். இந்தத் தேர்தலிலும் விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் சினேகன் போட்டியிடுகிறார். அதே கட்சியில் திரைத்துறையைச் சேர்ந்த மேலும் 3 பேர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

    நடிகரும், திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இந்த தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதன்முறையாக களமிறங்கியுள்ளார். திமுகவில் இருந்து காங்கிரஸில் சேர்ந்து, பின்னர் அங்கிருந்து பாஜகவுக்கு தாவிய நடிகை குஷ்பூ, இந்த முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இயக்குனரும், நடிகருமான சீமான் நாம் தமிழர் கட்சியைத் தொடங்கி பத்தாண்டுகளுக்கும் மேலாக தேர்தலை சந்தித்து வருகிறார். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியில், சீமான் திருவொற்றியூர் தொகுதியில் களம் காண்கிறார்.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் மன்சூர் அலிகான், கோவை தொண்டாமுத்தூரில் போட்டியிடுகிறார். நடிகர் மயில்சாமியும் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். தொலைக்காட்சியில் காமெடி டைம் நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள மயில்சாமி, தற்போது தேர்தல் அரசியலிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

    விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டாலும் இவர்கள் இருவரும் வேட்பாளர்களாக களம் இறங்கவில்லை. உடல்நலப் பிரச்னையால் விஜயகாந்த் விலகி இருந்தாலும், சரத்குமார் அனைத்து தொகுதிகளிலும் களப்பணி செய்ய வேண்டியிருப்பதால் போட்டியிடவில்லை என்று அறிவித்திருக்கிறார். அவரது மனைவி ராதிகாவும் தேர்தல் களத்தில் இருந்து பின் வாங்கியுள்ளார்.

    மேலும் படிக்க... தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

    கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் மரணமடைந்ததை அடுத்து நடைபெறும் இடைத்தேர்தலில் அவரது மகனும், நடிகருமான விஜய் வசந்த் போட்டியிடுகிறார். திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் செந்தில், கார்த்திக் விந்தியா என பல திரை பிரபலங்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் தமிழக திரை உலகில் சினிமா துறையினருக்கு நீங்காத பங்கு என்றும் இருந்து கொண்டே இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: