Home /News /entertainment /

சோ அறிமுகமான படத்தின் அபாரமான விற்பனை

சோ அறிமுகமான படத்தின் அபாரமான விற்பனை

சோ ராமசாமி

சோ ராமசாமி

பெற்றால்தான் பிள்ளையா நாடகத்தில் மெக்கானிக் மாடசாமி என்ற கதாபாத்திரத்தில் சோ நடித்திருந்தார். பார் மகளே பார் படத்தில் அந்த வேடத்தில் அவரே நடித்தார். அதுதான் சோ ராமசாமியின் முதல் திரைப்படமாக அமைந்தது.

  • News18
  • Last Updated :
சிவாஜி கணேசன், பீம்சிங் இணை உருவாக்கிய 'ப' வரிசைப் படங்கள் பெரும்பாலும் சோடை போனதில்லை. சிவாஜிக்கு விதவிதமான கதாபாத்திரங்களை தந்தவர்களில் பீம்சிங் முக்கியமானவர். இவர்களது கூட்டணியில் 59 வருடங்களுக்கு முன், 1963, ஜுலை 12 இதே நாளில் வெளியான படம் பார் மகளே பார்.

பெற்றால்தான் பிள்ளையா நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் பார் மகளே பார். பெற்றால்தான் பிள்ளையா நாடகம்கூட ஒரு இந்திப் படத்தின் தழுவல்தான். சினிமா கதைப்படி சிவாஜி பெரிய ஜமீன்தார். அவரது மனைவி சௌகார் ஜானகி. பல வருடங்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. கூடவே வேறொரு குழந்தையும் வந்து சேர்கிறது. இரண்டையும் தன் குழந்தை எது என்பது அறியாமல் வளர்க்கிறார் சௌகார் ஜானகி. இந்த உண்மை சிவாஜிக்கு தெரியாது.பணக்கார திமிர் பிடித்த ஜமீன்தார் வேடத்தில் சிவாஜி அசத்தியிருந்தார். அதுவும் படத்தின் பிற்பகுதியில் நவரசங்களையும் காட்டுவதற்கான காட்சிகளின் குவியலில் ஒரு சிகரத்தையே கட்டி எழுப்பியிருந்தார். நாடகத்திலிருந்து சினிமாவாக கதை மாற்றம் பெறுகையில் முக்கியமான ஒரு மாற்றத்தை பீம்சிங் செய்தார். நாடகத்தில் ஜமீன்தாருக்கு இரு ஆண் குழந்தைகள். அவர்களில் ஒருவராக ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தார். நாடகத்தை சினிமாவாக்கும் போது ஆண் குழந்தை என்பதை பெண் குழந்தை என்று மாற்றினார். இதனால், நாடகத்தில் நடித்த ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. விஜயகுமாரி அவருக்கு பதில் நடித்தார். இன்னொருவர் புஷ்பலதா.பெற்றால்தான் பிள்ளையா நாடகத்தில் மெக்கானிக் மாடசாமி என்ற கதாபாத்திரத்தில் சோ நடித்திருந்தார். பார் மகளே பார் படத்தில் அந்த வேடத்தில் அவரே நடித்தார். அதுதான் சோ ராமசாமியின் முதல் திரைப்படமாக அமைந்தது. இந்தப் படத்தின் இன்னொரு ஆச்சரியம் எம்.ஆர்.ராதா. பொதுவாக வில்லன் வேடத்தில் நடிக்கும் எம்.ஆர்.ராதா இதில் நடன ஆசிரியராக நல்லவராக நடித்திருந்தார். எம்எஸ்வி இசையில் படத்தில் இடம்பெற்ற 10 பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார். அவள் பறந்து போனாளே..., நீரோடும் வைகையிலே இரண்டும் சூப்பர்ஹிட்டாயின. மற்ற பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றன.பார் மகளே பார் படத்தை பத்திரிகைகள் பாராட்டி விமர்சனம் எழுதின. குறிப்பாக சிவாஜியின் நடிப்பை புகழ்ந்தன. 'சிவாஜி முற்பகுதியில் குடும்பத்தினரிடம் அன்பைச் சொரிந்தவர், பிற்பகுதியில் தீயைப் பொழிந்து எரிமலை வெடித்தது போன்று பொங்கிக் குமுறிப் பாய்ந்து உதறுகிறார். கடைசியில் கண்ணீருக்கு இடையில் கதறிக் கரைந்து திருந்துகிறார். மமதை, வெறுப்பு, கோபம், துயரம், அன்பு, வேதனை முதலிய பல்வேறு உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்துவிட்டால் சிவாஜி கணேசன் விட்டு விடுவாரா? இறந்து போனதாக கூறப்படும் தனது மகளின் படத்தை வேலைக்காரனிடம் கேட்டு வாங்கி நெட்டுயிர்த்து நெகிழ்ந்து போகும் கட்டம் கண்ணெதிரில் நிற்கிறது...' என அன்றைய கல்கி தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தது.கஸ்தூரி பிலிம்ஸ் வி.சி சுப்புராமன் பார் மகளே பார் படத்தை தயாரித்தார். படத்தின் தமிழக உரிமையை சிவாஜியின் சிவாஜி பிலிம்ஸ் வாங்கி விறியோகித்தது. இதில் அவர்களுக்கு அன்றைய மதிப்பில் 21 லட்ச ரூபாய் கிடைத்தது. அன்று அது மிகப்பெரிய தொகை. இன்று அதன் மதிப்பு 20 கோடிகளுக்கு மேல் வரும்.பார் மகளே பார் அனைத்து சென்டர்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Cho

அடுத்த செய்தி